ஸ்டெர்லைட் ஆலைச் சிக்கல் – மக்கள் சிவில் உரிமைக் கழகம் இயற்றிய 8 தீர்மானங்கள்

சனவரி 20, 2019 அன்று மதுரையில், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்)- தமிழ்நாடு & புதுச்சேரி ஒருங்கிணைத்த ‘ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் திசை வழி’ என்ற மாநிலக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித் துண்டறிக்கை வழங்கியதற்காகத் தூத்துக்குடியைச் சார்ந்த சந்தோஷ்குமார், மைக்கேல், வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோரைக் கைது செய்ததை பியூசிஎல் வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வித நிபந்தனைகளுமின்றி, சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென பியூசிஎல் கோருகிறது.

2. தூத்துக்குடி நகரில் கூடுவதற்கோ, கூட்டம் நடத்துவதற்கோ காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுப்பதாகச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆயுதங்களின்றி, அமைதியான முறையில் கூடுவது இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையாகும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து 8 மாதங்கள் உருண்டோடிவிட்ட பிறகும், மக்கள் கூடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பானது. எனவே, மாநில அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, கூட்டம் கூடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இதற்குக் காரணமாக இருக்கும் மாவட்டக் காவல்துறை ஆய்வாளரை தமிழக அரசு உடனடியாகப் பணிமாறுதல் செய்ய வேண்டும்.

3. தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு மரணமும், மரணத்தை ஏற்படுத்தும் கொடுங்காயமும் கொலைக்குச் சமமான குற்றச்சாட்டாகக் கருதப்பட வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டவர்களுக்கும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்களுக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் குற்றவியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட வேண்டும். அதேபோல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் விளைவிக்கக் கூடிய கொடுங்காயத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிகள் அனைவர் மீதும் எதிர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என பியூசிஎல் வலியுறுத்துகிறது.

4. ஏற்கனவே போராட்டம் அறிவிக்கப்பட்ட மே 22 ஆம் நாளன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாமல் போனது ஏன் என்பது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல், வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்த புகாரைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையையும் முறையிட்டவர்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு உண்மைத் தன்மை அறியப்பட வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.

5. காவல்துறையினரின் ஒவ்வொரு கொடூர நடவடிக்கையும் அவர்கள் “சீருடை அணிந்த (சில நேரங்களில், தூத்துக்குடியில் போல சாதாரண உடைகளில்) குற்றவாளிகள்” போல் நடந்துகொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் சட்டத்திற்கு முன்பு எந்தத் தண்டனையும் இல்லாமல், “கடமையைச் செய்யும் தற்காப்புப்” போர்வையில் தப்பித்துக்கொள்கிறார்கள். அதனால் 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்றழைக்கப்படும் முதல் சுதந்திரப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியால் இயற்றப்பட்ட அடக்குமுறைக் காவல் சட்டம் 1861-ல் பொருத்தமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத்திற்கு மாற்றாக, சீருடையில் உள்ளவர்கள் தங்கள் செயல்களுக்கும், தவறுகளுக்கும் பொறுப்பேற்கச் செய்கிற வகையில், மக்களுக்கு ஆதரவானப் புதியச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென பியூசில் கோருகிறது.

6. பொது நலனை மேற்கோள்காட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை அறிவித்த மாநில அரசின் ஆணை, சட்டத்தின் முன் செல்லத்தக்கதல்ல என்றும், முன்பு செய்யப்பட்டதைப் போல, ஆலையை மீண்டும் திறப்பதற்குச் சட்டபூர்வ அனுமதியைப் பெறுவதற்கு வழிவகை செய்வது என்றும் மக்களின் கோபத்தைத் தற்காலிகமாகத் தடுத்துவைக்கும் நோக்கம் கொண்டது என்றும் தெரிகிறது. மாநில அரசு அதன் அரசியல்சட்டக் கடமைகளைச் செய்துகொண்டிருக்கிறது என்றால், ஆலையை மூடும் அதன் அறிவிக்கப்பட்ட நோக்கத்தில் உண்மையாக இருக்கிறது என்றால், பின்னர் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதை உறுதிப்படுத்துவதற்குச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கையை பின்வரும் வகையில் எடுக்க வேண்டும்:

அ) நீர் (மாசுத் தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1974, காற்று (மாசுத் தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1981 ஆகியவற்றுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆகியவற்றின் உரிய பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும்

ஆ) மாசு அளவு (நச்சாக்கபட்ட நீர், காற்று மற்றும் நிலம் மற்றும் மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு) தொடர்பாக விளக்கமான நிலை அறிக்கையை வெளியிட வேண்டும்

இ) நிலை அறிக்கையில் காணப்பட்ட மீறல்களைக் கருத்தில்கொண்டு, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான உரிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

ஈ) இறுதியாக, மக்களின் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் அந்த ஆலை சரிசெய்யமுடியாத நாசத்தை ஏற்படுத்தியுள்ளதால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.

7. ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி தொடங்குவதற்கும், விரிவாக்கத்திற்கும் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அரசு கையகப்படுத்திய நிலங்கள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மீட்டுத்தரப்பட வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் இழப்புக்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பண உதவியும், மருத்துவ உதவியும் ஸ்டெர்லைட்டின் செலவில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என பியூசிஎல் வலியுறுத்துகிறது.

8. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தூத்துக்குடியோடு மட்டும் சுருங்கி விடாமல், மாநிலம் தழுவிய அளவில் மக்கள் திரள் போராட்டமாக மாற, பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பரப்புரை நிகழ்த்தவும், செயல்பாடுகளை முன்னெடுக்கவும் பியூசிஎல் எடுக்கும் முன்முயற்சிகளுக்கு அனைத்து ஜனநாயகச் சக்திகளும் ஆதரவளிக்க வேண்டுமென பியூசிஎல் வேண்டுகிறது.

கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர்,
க. சரவணன், மாநிலப் பொதுச்செயலர்.

Leave a Response