நடிகர் விஜய்க்கு நாம்தமிழர்கட்சியினரின் அதிரடி பதிலடி

நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா 05-01-2019 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது, தன் படச் சிக்கலுக்காக நடிகர் விஜய் மிகவும் பணிவுடன் ஆட்சியாளர்களிடம் பேசியதை விமர்சித்துப் பேசினார்.

இதனால் விஜய் ரசிகர்கள் சீமானைத் திட்டித் தீர்க்கின்றனர். திருட்டு பய் சீமான் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் சீமானைத் திட்டி பதிவுகள் போட்டுவருகின்றனர்.

அதர்கு எதிர்வினையாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஆ.அருளினியன் எழுதியுள்ள பதிவு…..

ஆட்டம் சரியான திசையை நோக்கித்தான் நகரத் தொடங்கி இருக்கின்றது. சினிமாவை அரசியலுக்கான ஆரம்பமாக நினைத்துக் கொண்டு, தங்களைத் தலைவனாக முன்னிறுத்த நினைக்கும், அத்தனை பேருக்கும் விஜய்தான் இறுதிப் புள்ளி.

ரஜினி, கமல் போன்ற தமிழரல்லாதோரை, எந்தளவிற்கு நாங்கள் எதிர்க்கின்றோமோ, அதில் ஒரு துளியும் மாற்றமின்றி விஜய்யையும் கட்டாயம் எதிர்ப்போம், அவர் தவறு செய்யும்பட்சத்தில்.

விஜய்க்கு நாம் தமிழர் கட்சியினர் வழங்கும் குறைந்தபட்ச மரியாதையே, அவர் ஒரு தமிழர் என்பதால் மட்டுமே என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். அதற்காக அவரது எந்தக் குறையையும் சுட்டிக்காட்டாமல் மெளனம் காக்க வேண்டிய அவசியம் சீமானுக்கோ, சீமான் தம்பிகளுக்கோ கிடையாது.

நாம் தமிழர் முன்வைப்பது தமிழருக்கான அரசியல் உரிமையைத்தான் என்றாலும், தமிழர் ஒருவரது அரசியல் செயல்பாடு தவறாக இருக்கும்போது, அவரை வலிய ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எடுத்துக்காட்டாக, ஐயா எடப்பாடி பழனிசாமி ஒரு தமிழராக இருந்தாலும், மோடிக்கு அடிமையாக வாழ்வதை, நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. அதுபோலத்தான், விஜய் எடப்பாடியிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரியதை எதிர்க்கின்றார் சீமான்.

விஜய்யின் ரசிகர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றுதான். நீங்கள் ஓர் ஆண்மையுள்ள தலைவனாக விஜய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஒரு கோழையாக இருக்க வேண்டும்? என்று நினைக்கிறீர்களா?

விஜய்யை எப்பொழுதுமே விமர்சிக்காத சீமான், நேற்று விமர்சித்து இருக்கின்றார் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்குமென்று உங்களில் ஒருவரேனும் யோசித்தீர்களா? அரைமெண்டல் ரஜினியின் ரசிகர்கள் போல, நீங்களும் சீமானை விமர்சிக்க கிளம்பிவிட்டால், உங்களுக்கும் அந்த அரைமெண்டலின் ரசிகர்களுக்கும் என்ன வித்தியாசம்?

‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்’ என்ற முதுமொழிக்கு இணங்க, விஜய்யை சீமான் அக்கறையோடு விமர்சித்ததை, விஜய் ரசிகர்கள் எதிர்ப்பது போல, பாஜக, ஆர்எஸ்எஸ், திராவிட-பெரியாரிய, ரஜினி-கமல் ரசிகர்கள் உள்பட அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று டுவிட்டரில் விமர்சித்ததை விஜய் ரசிகர்கள் கவனித்தீர்களா?

கத்தி படத்தில் தொடங்கி சர்கார் படம் வரை விஜய்க்கு ஒரு பிரச்சனை என்றால், ‘அவன் நம்ம தம்பிடா’ என்று எங்களிடம் சொல்லிவிட்டு, ‘விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் நிற்கும்’ என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்ததும் இதே சீமான்தான் என்பதை மறந்துவிட்டீரோ விஜய் ரசிகர்களே!

சரி.. எல்லா பிரச்சனைகளுக்கும் விஜய்க்கு ஆதரவாக சீமான் நின்றாரே..

2016 தேர்தலில் சீமானுக்கு ஆதரவாக இருங்கள் என்று விஜய் உங்களிடம் என்றேனும் சொன்னாரா? ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று விஜய்க்கு தெரியாதோ? ‘இந்தத் தேர்தலில் எனது ரசிகர்கள் சீமானை ஆதரியுங்கள்’ என்று ஆண்மையோடு விஜய் ஏன் அறிவிக்கவில்லை? ஜெயலலிதா உயிரோடு இருந்ததால் பயமா?

‘ஆளப்போறான் தமிழன்’ என்று பாட்டிற்கு ஆடினால் மட்டும் போதுமா? அதனையே, தனது கொள்கை நிலைப்பாடாகக் கொண்டு ஒருவன் தேர்தலைச் சந்திக்கும் போது, அவனை ஆதரிப்பதுதானே ஆண்மைக்கு அழகு.

திரைப்படத்தில் பெரிய ஹீரோ போல நடித்துவிட்டு, நிஜத்தில் படம் வெளியீட்டில் பிரச்சனை என்று வந்ததும், ஜெயலலிதாவிடம் நேரம் கேட்பதும், எடப்பாடியிடம் நேரம் கேட்பதும் கோழைத்தனத்தின் உச்சம் இல்லையா? திரைப்போராளிகள் ஒருபோதும் தரைப்போளிகள் ஆகமுடியாது என்பதை விஜய்யும் நிரூபிக்கின்றாரோ?

சீமான் என்ன பேசினார் என்பதை யாரேனும் ஆழமாகக் கவனித்தீர்களா?

ஒரு விரல் புரட்சி என்று சொல்லிவிட்டு, ஒரு புரட்சியாளன் போல வாழாமல், மோடியின் அடிமை எடப்பாடியிடம் சென்று மண்டியிட்டுத்தான், திரைப்படத்தை வெளியிட வேண்டுமா? ‘ஆமாம்.. நான் திரைப்படத்தில் பேசினேன்’ என்று ஆண்மையோடு சொல்ல வேண்டியது தானே என்று சீமான் கேட்பதை ஒரு ஆண்மையுள்ள விஜய் ரசிகனும் புரிந்துகொள்ளவில்லையா?

திரையில் ஆயிரம் பேரை அடிப்பதும், ஆளும் கட்சியின் மேடையில் உட்கார்ந்து சீன் போடுவதும் போல நடித்துவிட்டு, ரியல் வாழ்க்கையில் மண்டியிட்டு வாழ்வது ஒரு தலைவனுக்கு அழகா? இதுபோல திரையில் ஒன்றுமாக, தரையில் ஒன்றுமாக சீமானே வாழ்ந்தாலும், கட்டாயம் நாம் தமிழர் பிள்ளைகள் சீமானையும் எதிர்ப்போம். ஏனெனில் நாங்கள் சீமானின் தம்பிகள். அரசியல் ஆண்மையுள்ளவர்கள்.

சும்மா.. கோமாளித்தனமா.. டிவிட்டர்ல டெண்ட் அடிக்கின்றேன்.. தெறிக்கவிடறேன்னு முட்டாள்தனமாக யோசிக்காமல், ஆக்கப்பூர்வமாக யோசியுங்கள் விஜய் ரசிகர்களே!

நீங்கள் அனைவரும் ஒன்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்…

விஜய் இன்னொரு ரஜினிகாந்த் போலத்தான் வாழப்போகிறாரே ஒழிய, கட்டாயம் மக்களின் நலனுக்காக வாழப்போவதில்லை.
நன்றி

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response