(2014 ஏப்ரலுக்குப் பிறகு)2015 ஜூலையில் பேரறிவாளன் மனு மீது விசாரணை, உச்சநீதிமன்றம் அறிவிப்பு.


முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனு மீது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வரும் ஜூலை 15-இல் விசாரிக்க உள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் துணைப் பதிவாளர் அண்மையில் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீஹரன் (எ) முருகன் உள்ளிட்டோரின் முறையீட்டு  மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் ஜூலை 15-ஆம் தேதி (புதன்கிழமை) விசாரிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி  அவர்களுக்கு விதித்த தூக்குத் தண்டனை ஆயுள் சிறை தண்டனையாகக் குறைத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து சிறை விதிகளுக்கு உள்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநில (தமிழகம்) அரசு முடிவெடுக்கலாம் என அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் தண்டனை குறைக்கப்பட்ட தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு  செய்தது. இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
அதைக் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு, “குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, அரசியல் சாசன அமர்வுக்கு இந்த மனு மீதான விசாரணை மாற்றப்படுகிறது’ என்று  உத்தரவிட்டார். அதுவரை அரசின் முடிவுக்கு எதிரான தடையும் தொடரும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், ஓராண்டு கடந்து விட்ட நிலையில், முருகன் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தேதியை உச்ச நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

Leave a Response