உடுமலை கவுசல்யா மறுமணம் தொடர்பான சர்ச்சைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சங்கர் (வயது 25). இவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யாவும் (22) பொள்ளாச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் கோபம் அடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படை மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகலில் சங்கரையும், கவுசல்யாவையும் கூலிப்படையினர் வெட்டிச் சாய்த்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் இறந்து விட்டார். அந்தத் தாக்குதலில் கவுசல்யா காயம் அடைந்து உயிர் தப்பினார்.

பட்டப் பகலில் பொது இடத்தில் நடந்த இந்த ஆணவ படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கவுசல்யா சங்கரின் பெற்றோருடன் உடுமலை அருகே குமரலிங்கத்தில் வசித்து வந்தார்.

அதோடு பல்வேறு சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டார். தனது கணவர் சங்கர் பெயரில் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வந்தார். சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்தும் அவர் போராடி வந்தார். மேலும் அவர் சங்கர் வீட்டில் அந்த பகுதி மாணவர்களுக்கு பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், நிமிர்வு கலையகம் என்ற பெயரில் இயங்கி வரும் சமூக அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் பறை இசைக்குழு வைத்து நடத்தி வருபவருமான சக்தி, கவுசல்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 8 அன்று எளிமையாக நடந்து முடிந்தது. பறை இசை முழங்க இருவரும் இல்லற உறுதிமொழி ஏற்பை எடுத்துக்கொண்டனர்.

கவுசல்யா – சக்தி திருமணம் முடிந்த கையோடு சர்ச்சைக்குரிய வகையில் புகார்கள் வெளிவந்துள்ளன.

சக்தி, நிமிர்வு கலையக பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அந்த அமைப்பில் இருந்து சக்தி நீக்கப்பட்டதாகவும், நிமிர்வு கலையகத்திற்கு வந்த திருநங்கை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், நிமிர்வு கலையகத்தில் தங்கியிருந்த பெண் ஒருவரை இரவில் அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக கருதி சக்தி பாலியல் ரீதியாக சீண்டியதாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றை நிமிர்வு கலையகத்துடன் இணைந்து பல்வேறு சமூக நிகழ்வுகளில் பங்கேற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஜீவானந்தம் தனது முகநூல் பதிவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டென்மார்க்கின் கோபன்ஹகனில் இசைக்குழு ஒன்றை வைத்துள்ள அஸ்வினி கணேசன் என்பவரும் புகார் கூறியுள்ளார். அவருடைய முகநூலில்,

மறுவாழ்க்கை நல்ல முடிவு. வாழ்த்துக்கள். ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் என்றும் ஓர் நல்ல துணை தேவை.

சாதி ஆணவ கொலைகளுக்கு தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம். நல்லது!

ஆனால் எந்த எந்த சாதினு சொல்லலையே. பார்பன பெண்ணை காதலித்து அந்த பெண்ணுக்கு குழந்தையும் கொடுத்து பின் அந்த பெண் தன் வளர்ச்சிக்கு உதவமாட்டாள் தான் தேடும் புகழ் சமூகத்தில் நன்கு தெரிந்த முகம் கொண்ட பெண்ணிடம் அது கிடைக்கும் என்பதால் பார்பன எதிர்பு என்று ஓர் காரணம் தேடி தான் காதலித்த பெண் ஒரு பார்பன பெண் என்பதால் என்னை ஆதிக்கம் செழுத்துகிறாள் என்று ஒரு கதையை கூறி அந்த குழந்தையை கருவிலேயே ஆணவ கொலை செய்தால் அதுக்கும் இவர்கள் குரல் கொடுப்பாங்களா இல்லை? எந்த எந்த சாதி எந்த எந்த வயது? , வயதுக்கு வந்தவர்களா இருக்கனுமா இல்ல சிசுவாக இருந்தாலும் இவர்கள் குரல கொடுப்பார்களா?

என்று எழுதியுள்ளார்.

Leave a Response