ஸ்டெர்லைட் ஆலை – தருண் அகர்வால் அறிக்கை குறித்து புதிய சர்ச்சை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அன்றைய தினமே ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இது தொடர்பாக ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமை யில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இக்குழுவினர் செப்டம்பர் மாதம் 22, 23-ம் தேதிகளில் தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றனர். தொடர்ந்து, சென்னையில் சில நாட்கள் முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடம் மனுக்களை பெற்றனர்.

நீதிபதி தருண் அகர்வால் குழு வின் அறிக்கை கடந்த 26-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 48 தலைப்புகளிலான தனித்தனி அறிக்கைகள், 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது, தவறானது, அதனை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. ஆலையை மூடுவது தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் ஏதும் கொடுக்கப்படவில்லை. மேலும், அவர்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற போதிய வாய்ப்பு வழங்கப் படவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது

என்று செய்திகள் வெளியாகின.இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஆதரவாக அறிக்கை வந்திருப்பதாகக் கடும் விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், அவை முழுமையான செய்திகளல்ல தருண் அகர்வால் குழு அறிக்கையில் ஸ்டெர்லைட் மீது கடும் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக தி ஒயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.

அதைத் தமிழாக்கியவர் ஜீவா.

அக்கட்டுரையில்….

விதிகளை மீறிய ஸ்டெர்லைட்: கண்டுபிடித்தும் கருணை பார்க்கும் தருண் அகர்வால் குழு:

பல ஊடகங்கள் வழங்கிய தகவல்களுக்கு முரணாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கை, உண்மையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்தியுள்ளது.

‘தி ஒயர்’ அந்த ஆய்வறிக்கையை பெற்றுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலை சட்ட நிபந்தனைகள் பலவற்றை மீறியுள்ளது வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் தகவல்கள் ஊடகச் செய்திகளில், ஸ்டெர்லைட் ஆலை குற்றமற்றது எனும் பொருள்பட முரணாக வெளியாகியுள்ளது. ஊடகச் செய்திகள் பல, ஆய்வறிக்கை அளித்துள்ள பரிந்துரைகள் குறித்தும் முரண்பட்ட தகவல்களையே வழங்கியுள்ளன.

சொல்லப்போனால், ஆய்வறிக்கை ஆலைக்கு எதிராக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளது. குறிப்பாக, ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக இயக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இதில் அடக்கம். இருப்பினும், தருண் அகர்வால் குழுவானது, வேதாந்தா நிறுவனத்துடன் சலுகை மனதுடன் நடந்துகொள்ளுமாறு அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், அறிக்கையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது என்றும், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும், காற்று மாசுபாடு தடுப்பு சட்டம், நீர் மாசுபாடு தடுப்லு சட்டம் மற்றும் ஆபத்தான கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிமுறைகள் ஆகியவற்றை மீறும் ஆலைக்கு தருண் அகர்வால் குழுவின் ஆய்வறிக்கையில் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலையை மனதில் வைத்தால் இந்த முரண் இன்னும் ஆழமானதாக உள்ளது. உரிமம் இல்லாத, தரம் இன்றி செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மக்கள். இந்த விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் சார்பான பிரதிநிதிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சுதந்திரமான சட்ட அங்கீகாரத்தை தர மறுத்துவிட்டது.

அகர்வால் குழுவின் அறிக்கை நகல் தங்களுக்கு தர வேண்டும் என்கிற அவர்களின் வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது. மாநில ஆணையத்தின் உதவியை நாடுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இயக்குவதற்கு ஒப்புதல் இல்லை

கடந்த ஏப்ரல் 9, 2018 அன்று ஆலையை இயக்குவதற்கு காற்று மற்றும் நீர் சட்டப்படி உரிமத்தை புதுப்பிக்க வேதாந்தா நிறுவனம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தது. இதையடுத்து, அந்த சட்டங்களில் விளக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டதால் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது.

ஏப்ரல் 9 ஆம் தேதி வழங்கப்பட்ட அந்த உத்தரவு, ஆலை கீழ்க்கண்ட 5 விதிமீறல்களை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டதன் அடிப்படையில் வழங்கப்பட்டது.

1. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளிலிருந்தும் ஆலைக்குள்ளும் இருந்தும் நிலத்தடி நீர் தாக்கத்தை உறுதிப்படுத்தும் நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை வழங்கப்படவில்லை.

2. உப்பார் ஆற்றங்கரையிலும், அங்குள்ள பட்டா நிலத்திலும் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகளை ஸ்டெர்லைட் ஆலை அகற்றவில்லை. இதனால் ஆற்றின் நீரோட்டம் தடைபடுகிறது. மேலும், உப்பார் ஆற்றுக்கும் காப்பர் கழிவுகள் கொட்டப்படும் இடத்திற்கும் இடையே எந்தவொரு தடுப்பும் அமைக்கப்படவில்லை.

3. ஆலையை இயக்குவதற்காக ஜூலை 10, 2008 அன்று வழங்கப்பட்ட உரிமம், ஜூலை 9, 2013 அன்றுடன் காலாவதியாகி விட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை ஆபத்தான கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளும் விதிமுறைகள், 2016-ன்படி முறையான உரிமம் இன்றி தொடர்ந்து இயங்கி ஆபத்தான கழிவுகளை வெளியேற்றியுள்ளது. உரிமத்தை புதுப்பிக்கக்கோரி ஆலை சமர்ப்பித்த விண்ணப்பமானது, மேலும் தகவல்களை சமர்ப்பிக்கக்கோரி திருப்பி அனுப்பப்பட்டது.

4. உரிமத்தை புதுப்பிக்கும் விதிமுறைகளின்படி, ஆலையில் காற்றில் ஆர்செனிக், நைட்ரஜன் ஆக்ஸைடு, பிஎம் 10, சல்பர் டை ஆக்ஸைடு SO2 ஆகியவற்றின் அளவுகளை சோதனை செய்ய வேண்டும். அங்குள்ள ஆய்வகத்தில் இந்த வசதி இல்லையென்றால், மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கொண்ட ஆய்வகத்தில் சோதித்து அதனை சமர்ப்பிக்க வேண்டும். இதனை ஸ்டெர்லைட் ஆலை சமர்ப்பிக்கவில்லை.

5. கடந்த பிப்ரவரி 22, 2018 அன்று நடத்தப்பட்ட ஆய்வில், ஆலையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, ஜிப்சம் பாண்ட் (Gypsum Pond) அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், மார்ச் 31, 2018 வரை அது அமைக்கப்படவில்லை.

தருண் அகர்வால் குழுவானது, ஸ்டெர்லைட் ஆலை மேற்கண்டவற்றில் மூன்று விதிமீறல்களை செய்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், பசுமை வளையம் (Green Belt) அமைக்கப்படாதது, நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைவான உயரத்தில் புகைப்போக்கியை அமைத்தது உள்ளிட்டவற்றையும் அக்குழு கண்டறிந்தது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நேரடியாக மேற்கோள் காட்டுகிறோம்.

குற்றச்சாட்டு 1: தண்ணீர் மாதிரிகளில் உள்ள கன உலோகங்கள் குறித்து மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை ஸ்டெர்லைட் ஆலை சமர்ப்பிக்க தவறிவிட்டது.

அறிக்கையின் 100 ஆவது பத்தியில், “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நிலத்தடி நீரை சோதிக்கும் கடமை உள்ளது. 44 ஆவது நிபந்தனையின்படி, ஆலையானது மாதந்தோறும் நீரின் தரத்தை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அதனை நிறுவனம் செய்யவில்லை”.

குற்றச்சாட்டு 2: பலமுறை நினைவுபடுத்தியும் உப்பார் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகளை ஸ்டெர்லைட் ஆலை அகற்றவில்லை. இதன் விளைவாக, ஆற்றின் நீரோட்டம் தடைபட்டுள்ளது.

பத்தி 117: ” சம்மந்தப்பட்ட இடத்தைக் குழு ஆய்வு செய்தபோது 3.5 லட்சம் மெட்ரிக் டன் காப்பர் கழிவுகள் பட்டா நிலத்தில் கொட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.”

பத்தி 119: காப்பர் கழிவுகளை நீக்குவது தங்கள் கடமையல்ல என நிறுவனம் கருதியது பிழையானது. கட்டப்பட்ட தடுப்புச் சுவர் போதுமானது அல்ல என குழு கருதுகிறது. எப்படியிருந்தாலும் உப்பார் ஆற்றங்கரையில் கழிவுகளை கொட்டியிருக்கக் கூடாது. கழிவுகள் மறுசுழற்சி செய்து பயன்படத்தக்க வகையில் மாற்றுவது நிறுவனத்தின் கடமை. ஆபத்து தரத்தக்க வகையில் கொட்டக்கூடாது.”

பத்தி 120: “தாழ்வான பகுதியில் நிரப்புதல் என்பது நிலப்பகுதி வரை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். அதன்படி, தரைமட்ட நிலத்தின் அளவை நால்வழி நெடுஞ்சாலை அளவுக்கு உயர்த்துவதற்கு அனுமதி கிடையாது. தாழ்வான பகுதியை நிரப்புவது என்பதன் நோக்கம் இதுவல்ல…

“காப்பர் கழிவுகள் ஆற்றின் அருகே கொட்டப்படக்கூடாது என்பதால், அங்கிருந்து அவை முழுமையாக அகற்றப்பட வேண்டும். காப்பர் கழிவுகள் மணலை விட லேசானவை என்பதால், பலத்த காற்று வீசும்போது அவற்றால் சூழல் கேடு ஏற்படும்…

“மார்ச் 14, 2017, செப்டம்பர் 11, 2017 ஆகிய தேதிகளில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பினாலும் கூட இதனடிப்படையில் ஆலையை மூடுவதென்பது கடுமையானது.”

பத்தி 124: “காப்பர் கழிவுகளை நீக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து எந்தவொரு அனுமதியும் நிறுவனம் வாங்காதது பிழையானது.

இது தொடர்பாக 2012, அக்டோபர் 5 ம் தேதி கழிவுகளை அகற்றுவதற்கு நிறுவனம் ஒப்புதல் பெறும் என குறிப்பிட்டிருந்ததை குழு கண்டறிந்துள்ளது”.

பத்தி 126: “இந்த உண்மையை நிறுவனம் மறுக்கவில்லை. காப்பர் கழிவுகளை நிலத்தில் நிரப்புவதற்கு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக நிறுவனம் வாதிட்டும் அதனை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. அதனால், நிபந்தனைகளை மீறி நிறுவனம் காப்பர் கழிவுகளை கொட்டியுள்ளது.”

குற்றச்சாட்டு 3: ஆபத்தான கழிவுகளை கையாளுவதற்கான ஆலையின் உரிமம், 2013 ஆம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டதால், உரிய அனுமதி இல்லாமலேயே உற்பத்தி மற்றும் கழிவு வெளியேற்றம் ஆகியவற்றில் விதிமுறைகளை மீறி ஈடுபட்டுள்ளது.

பத்தி 129: “உரிமத்தை புதுப்பிக்க அந்நிறுவனமோ, நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்த முடிவை எடுக்க தமிழ்நாடு மாசுக் கட்டாட்டு வாரியமோ ஆர்வம் காட்டவில்லை. மேலும் உரிய அனுமதி இல்லாமல் ஆலை 58 மாதங்களாக ஆபத்துமிக்க கழிவுகளை வெளியேற்றியுள்ளது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆனால், ஆலையை தொடர்ந்து இயக்க வாரியம் தொடர்ந்து ஒப்புதலை வழங்கியுள்ளது.

“ஆலைக்கான உரிமத்தை முறையாக புதுப்பிக்காததற்கு நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இரண்டுமே கடமைப்பட்டவர்கள் என இக்குழு கருத்து தெரிவிக்கிறது…

“இந்த ஒப்புதல், கழிவுகளை கையாளுதல் 2016 விதிமுறைகளில் முக்கியமானதாகும்.”

கூடுதல் தகவல்கள்:

குழு சென்னையில் விசாரணை நடத்தியபோது பொதுமக்கள் சார்பாகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாகவும் ஆலை மீது இன்னும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பசுமை வளையம், நிலம், புகைப்போக்கியின் உயரம் குறித்த குற்றச்சாட்டுகள் அதில் எழுப்பப்பட்டன. நிலம் குறித்த குற்றச்சாட்டில் குழுவானது குறிப்பிட்ட முடிவுக்கு வராவிட்டாலும், மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து முடிவெடுத்தது.

குற்றச்சாட்டு 4: பசுமைவளையம் குறித்த விதிமீறல்

பத்தி 160: “ஆலைக்கு நேரடியாக சென்று குழு ஆய்வு செய்ததில், ஆலைக்குள் பசுமை வளையம் அமைக்கப்படவில்லை. அதுவொரு கான்கிரீட் காடு போன்றே இருந்தது. பிரதான நுழைவுவாயில் மற்றும் நிர்வாக பிரிவு ஆகிய இடங்களில் மட்டும் பனை மரங்களுடன் கூடிய தோட்டம் வளர்க்கப்பட்டுள்ளது.

“நிறுவனம் அவர்களின் டவுன்ஷிப்பில் மட்டும் பசுமை வளையத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், ஆலைக்குள் இல்லை. விதிமுறைகளின்படி, 25 மீட்டர் அகலத்தில் பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அது அமைக்கப்படவில்லை.”

குற்றச்சாட்டு 5: ஸ்டெர்லைட் ஆலையில் புகைப்போக்கி நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான உயரத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது, இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாத திறனுடையதாக அது உள்ளது.

பத்தி 178: “லோடு 1.0 ஆக இருந்தால், புகைப்போக்கியின் உயரம் 83.51 மீட்டர் கொண்டதாக இருக்க வேண்டும். லோடு 2.0 ஆக இருந்தால், 67.83 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 60.38 மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.”

பத்தி 179: “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி மக்கள் ஆகியோரால் இந்த உயரக் குறைவு காரணமாக கண் எரிச்சல், தோல் நோய்கள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஆகியவை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். புகைப்போக்கியின் உயரம் அதிகரிக்கப்பட்டிருந்தால், சல்பர் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் நீர்க்கப்பட்டு தூத்துக்குடி சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் பாதித்திருக்காது.”

இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response