வாழும் கலை இரவிசங்கர் சர்ச்சை – பெ.மணியரசன் முக்கிய அறிக்கை

தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் இரவிசங்கர் தியானம் நடத்துவது தமிழ்ச் சைவ நெறிமுறைக்கு எதிரானது,உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தவறானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

மதுரை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை ஆணை பிறப்பித்ததால், திரு. இரவிசங்கர் தலைமையிலுள்ள “வாழும் கலை” அமைப்பின் தியானச் சடங்குகளும், பிரச்சாரமும் 2018 திசம்பர் 7 – 8 நாட்களில் தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் நடைபெறவில்லை. அதேவேளை, தஞ்சையில் தனியார் திருமண மண்டபத்தில் அவரின் இருநாள் தியானமும், பிரச்சாரமும் நடந்து முடிந்தன.

தியானம் முடிந்த பின் இரவிசங்கர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிவிப்பு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. “நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலில் இதே தியானத்தை நடத்துவேன், தியானம் நடந்தால் கோயில் இடிந்து விடுமா” என்று இரவிசங்கர் ஊடகத் துறையினருடம் கேள்வி எழுப்பினார்.

இந்தப் பேச்சு ஓர் ஆன்மிகத் துறவியின் மனப்பக்குவத்தை – அமைதி நாடும் உளவியலை வெளிப்படுத்தவில்லை. ஆன்மிகத்தில் “அபசகுனம்” என்ற பழமொழி உள்ளது. கோயில் இடிந்து விடுமா என்று அலட்சியமாகக் கேட்பது இரவிசங்கரின் உள்ளக்கிடக்கையை வெளிப் படுத்துகிறதா என்ற வினா எழுகிறது.

இவ்வாறு அவர் மீது ஐயப்படுவதற்கு இடம் கொடுக்கும் வகையில்தான், “வாழுங்கலை” அமைப்பின் தியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு சுவாமிநாதன் 07.12.2018 அன்று செய்தியாளர்களுக்குக் கொடுத்த அறிக்கையின் வாசகங்கள் இருக்கின்றன.

“தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராசராசசோழனின் ஆத்மா சாந்தியடையவில்லை. அது கோயிலுக்குள் சுற்றித் திரிகிறது. குருஜியிடம் (இரவிசங்கர்) உள்ள ஓலைச்சுவடிகள் மூலம் இந்தச் செய்தி தெரிய வந்தது. இராசராசன் ஆத்மா சாந்தியடையவும், பெரிய கோயிலுக்குள் உள்ள வேறு சில குறைகளை நீக்கவும் குருஜி இந்தத் தியானத்தை ஏற்பாடு செய்துள்ளார்” என்று சுவாமிநாதன் கூறியுள்ளார்.

“வாழுங்கலை” பற்றி மக்களுக்கு அறிவுரை வழங்குவது முகாமையான நோக்கமல்ல; ஒரு பேய் போல் கோயிலுக்குள் அலையும் இராசராசன் ஆத்மாவை அடக்குவது அல்லது வெளி யேற்றுவதற்குரிய மந்திரங்களை செபிப்பது என்பதுதான் மைய நோக்கம் என்று அந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கூற்றிலிருந்து தெரிகிறது.

எனவே, இரவிசங்கரின் தியான நோக்கம் பல்வேறு மர்மங்களைக் கொண்டுள்ளது. துறவியின் பரிபக்குவ மனநிலை என்பது, பகைவர்க்கும் அருளும் தன்மையாகும். ஆனால் இரவிசங்கர் பழிவாங்கும் வன்மத்துடன் அதே பெரிய கோயிலில் தியானத்தை நடத்திக் காட்டுவேன் என்று சவால் விடுகிறார். அவர் திட்டமிட்ட தியானம் அதே தஞ்சையில் இன்னொரு இடத்தில் நடந்து முடிந்து விட்டது. அதன்பிறகு இன்னொரு தடவை அதே தஞ்சையில் அந்தத் தியானம் ஏன் தேவைப்படுகிறது?

அடுத்து, தஞ்சைப் பெரிய கோயில் தமிழ்ச் சைவத்திருக்கோயில்! அதன் வழிப்பாட்டு நெறி முறைகள் திருமந்திரம், தேவாரம், திருவாசகம் சார்ந்தவை. இந்து மதம் பல்கடவுள் வழிபாட்டு (HINDU PANTHEON) கோட்பாடுகள் கொண்ட கூட்டமைப்பு வடிவம் கொண்டது. அதேவேளை அந்தந்தக் கோயிலில் அந்தந்தக் கோயிலுக்குரிய ஆகமம், வழிபாட்டு முறை ஆகியவை மட்டும்தான் கடைபிடிக்கப்பட வேண்டும் என “சுப்பிரமணிய சாமி – எதிர் – தமிழ்நாடு அரசு” வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (காண்க : Dr. Subramaniyan Swamy Versus State of TamilNadu and Others, Civil Appeal No. 10620 of 2013).

சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம் தீட்சிதர்களிடமிருந்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற வழக்கில், “அந்தக் கோயில் தனி வகையினம் (Demonination Temple); அது தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருக்க வேண்டும்; அங்கு வழிபாட்டு முறை வேறு; அரசோ மற்றவர்களோ அதில் தலையிடக் கூடாது” என்று தீர்ப்பளித்தது.

தஞ்சைப் பெரிய கோயில் இந்து மதத்தில் தனி வகையினக் கோயில்! அந்த சைவ சிந்தாந்த வகையினத்தைச் சேராத இரவிசங்கரோ, அவரின் வாழும் கலை அமைப்போ அக்கோயிலுக்குள் நுழைந்து தியானமோ பிரச்சாரமோ செய்ய சட்டப்படி அனுமதி இல்லை! அத்துடன், சைவ சித்தாந்த நெறி சார்ந்துகூட அக்கோயிலுக்குள் தனி அமைப்பினர் தியானம் செய்வதும், சமயப் பிரச்சாரம் செய்வதும் மரபு அல்ல! இதுவரை அவ்வாறு நடந்ததில்லை!

எனவே, தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் – சைவ சித்தாந்த வகையினத்தைச் சாராத இரவிசங்கர் தியானம் மற்றும் பிரச்சாரம் செய்ய அனுமதித்த தொல்லியல் துறை அதிகாரிகள் மீதும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response