இலங்கை விவகாரத்தில் மூக்கை மூடிக்கொள்வது ஏன்? – மோடிக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

இலங்கை நாடாளுமன்றத்தை அடாவடியாக கலைத்து தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். அதுகுறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்….

ராஜபக்ஷேவை இலங்கை மக்களின்மேல் திணிக்க நடக்கும் கூத்தை இ காங்கிரஸ் கள்ளப்பார்வையால் ரசிப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், பாஜகவும்? மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கும் அரசு என்பதை மறந்துவிடவேண்டாம்.
ஸ்ரீலங்காவில் நடக்கும் ஜனநாயக படுகொலையை கண்டு தமிழ் நெஞ்சங்கள் பதைப்பது மத்திக்கு தெரியவில்லையா? இல்லை தமிழன்தானே, தமிழனின் உணர்வு பிரச்சினைதானே என்ற அலட்சியமா? இல்லை, ஏதாவது சொல்லிவிட்டால் என்ன ஆவது என சீனாவை நினைத்து அச்சமா?

யாரை நோவது? ராஜபக்ஷேவை அழைத்து ராஜஉபச்சாரம் கொடுக்கும் சுப்பிரமணியம் ஸ்வாமி போன்ற ‘தமிழர்களையா’, இல்லை தமிழ்நாட்டின் தலையாட்டி பொம்மை தலைவர்களையா? இல்லை, ராஜபக்ஷேவுடன் கொஞ்சி குலாவிவிட்டு இங்கு வந்து கூப்பாடு போடும் திராவிட இரட்டைவேட செம்மல்களையா? சீனாவின் முரட்டுபலத்தை கண்டு அஞ்சி மௌனித்திருக்கும் ஐ நா வையா?

பக்கத்து நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற சப்பைக்கட்டு வேண்டாம். அண்டைநாடு அரசியல் ஒன்றும் இந்திய ஆட்சிபீடத்திற்கு புதிது அல்ல.
இந்திய வங்காளிகள் கிழக்கு பாகிஸ்தானியர்பால் வைத்த இனப்பற்றை மதித்து வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற போரிட்ட இந்திராவின் கட்சிதான் இலங்கையில் ஒரு இனப்படுகொலையில் ஈரமில்லாமல் பங்குகொண்டது. திபெத்தியர்களை அரவணைத்து தலாய் லாமாவை வரவேற்ற இந்தியா, மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்ப தயார் நிலையில் உள்ள இந்தியா, அப்பொழுதெல்லாம் அண்டை நாட்டுக்குள் மூக்கை நுழைந்தவர்கள் இப்பொழுது மூச்சுவிட கூட தயங்கி மூடிக்கொண்டு இருப்பது ஏன்?

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response