மீ டூ வை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது – ஏ.ஆர்.ரகுமான் எச்சரிக்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மீடூ இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்ட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் மீடூ குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. பாடகி சின்மயி , கவிஞர் வைரமுத்து குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கவிஞர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசிகணேசன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்காக லீனாமணிமேகலை மீது வழக்கு தொடுத்துள்ளார் சுசி.கணேசன்.

திரைத்துறையிலும், பொதுமக்கள் மத்தியிலும் மீடு விற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

மீடூ இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது திரையுலகை சுத்தமானதாகவும், பெண்களுக்கு மரியாதையளிக்கக் கூடிய ஒன்றாகவும் பார்க்கவே விரும்புகிறேன். நானும், எனது குழுவும் எங்களுடன் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பான, நன்முறையில் வேலை பார்ப்பதற்கான சூழலையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

சமூக வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒருவேளை, இதைத் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க நாம் இணையதள நீதி அமைப்பு ஒன்றைக் கவனமாக உருவாக்குதல் நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response