விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், தற்போது ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
இந்தவாரம், பாலாஜி மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எனவே, இந்த சீஸன் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் கூட ஆண் இல்லை. கடந்த சீஸனில் ஒரு பெண் போட்டியாளர் கூட இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட யாஷிகா ஆனந்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகையும், கடந்த சீஸன் போட்டியாளர்களில் ஒருவருமான சுஜா வருணி.
“நீயொரு நிஜப் போராளி. நீ வெளியேற்றப்படுவாய் என நான் எதிர்பார்க்கவில்லை. கடைசி டாஸ்குக்குப் பிறகு நான் உன்னிடம் என்ன சொன்னேன் என்பதை நீ நினைவில் வைத்திருப்பாய் என நம்புகிறேன்.
இறுதிப்போட்டியில் நுழைவதைக் காட்டிலும், நீ அதிகமான வெற்றிக்குத் தகுதியானவள். உன்னை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். உனது விளையாட்டுத்தனத்தை மெச்சுகிறேன். உனது பணி சிறக்க எனது வாழ்த்துகள். நீ பணியில் பல சாதனைகள் படைப்பாய் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சுஜா வருணி.