நீங்கள் செய்தது அநாகரிகம் – தமிழிசைக்கு பாரதிராஜா சூடு

செப்டம்பர் 3 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பிஹெச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவியான சோபியா விமானத்தில் வைத்தே `பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக’ என்று கைகளை உயர்த்தி முழக்கம் எழுப்பினார்.

மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடனும் மீண்டும் தமிழிசையைப் பார்த்து முழக்கம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறையினரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

இயக்குநர் பாரதிராஜா இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது….

என் இனிய சகோதரி தமிழிசைக்கு பாசத்துடன் பாரதிராஜா,

நீங்கள் தமிழக பி.ஜே.பி-யில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்களெல்லாம், தேசிய சிந்தனையுடைய இலக்கியவாதி குமரி அனந்தனின் மகள் என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் இதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

நீங்கள் பொது வாழ்வில் ஈடுபடும்போது எதையும் நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். பல இடங்களில் நான்கூட கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நாம் எதிரி என்று சிலரை நினைப்போம், நம்மை எதிரி என்று சிலர் நினைப்பார்கள். யாரும் யாருக்கும் எதிரியல்ல. கருத்துவேறுபாடு, ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது.

உங்கள் விமானப் பயணத்தில் உங்களுடன் பயணித்த சோபியா தாய் மண்ணை விட்டுப் பிரிந்து வாழ்வியலுக்காகக் கனடா சென்று தான் பிறந்த மண்ணின் மானத்தையும் காத்து புகுந்த மண்ணின் பெருமையும் காத்தவள். தான் பிறந்த மண்ணில் சமீபத்தில் நடந்த தூத்துக்குடிச் சம்பவம் அவளை எவ்வளவு பாதித்திருக்க வேண்டும். அந்த வேதனையில் அந்த உரிமையில் அவர் ஒரு தமிழச்சியாகத் தைரியமிக்க தமிழச்சியாகத் தமிழிசைக்கு எதிராக தைரியமாகக் குரல் கொடுத்திருப்பாள். நீங்க உங்கள் தகுதிக்கு அவரை அழைத்து உங்கள் பக்க நியாயங்களைக் கூறி அவளைச் சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?.

அதை விடுத்து அந்த வீரமுள்ள தமிழச்சி மீது புகார் கொடுத்து அவளைக் கைது செய்து செய்து உள்ளே தள்ளவேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான விஷயம். உங்களை நான் குமரி அனந்தனின் பெண்ணாக நினைக்க முடியவில்லை. நீங்கள் எங்களில் ஒருவராக இல்லாமல் வேறொரு பெண்ணாகவே பார்க்கமுடிகிறுது. மன்னிக்கணும். அந்த பெண்ணைப் பற்றி முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுவிட வேண்டும் இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Leave a Response