தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கேரளாவுக்கு தமிழகம் பெரிய அளவில் உதவி வருகிறது.
மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ தம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு நேற்று 25-08-2018 மாலை 06 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு சென்று வழங்கினார்கள்.
நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்ததைக் காரணம்காட்டி அங்கிருந்த பாஜக-வினர் நிவாரணப் பொருட்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கோட்டயம் கிழக்கு காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் 4 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்னர் வாகனங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கேரள காவல்துறையின் இச்செயலுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.