ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த கலைஞர்ருக்குப் புகழ்
வணக்கம் செலுத்தும் வகையில், திரைப்படக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து, மறக்க முடியுமா கலைஞர் எனும் தலைப்பில் பேசினர்.
இந்த நிகழ்ச்சி கோவையில் இன்று 25ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு நடிகர் பிரபு பேசினார்.
அவர் பேசியதாவது:
சிறுவயது முதலே கலைஞர் அவர்களை பெரியப்பா என்று சொல்லித்தான் கூப்பிடுவேன். அப்படித்தான் கூப்பிடணும் என்று என் அப்பா சிவாஜி அவர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில், என் சிறுவயதில் ஒருமுறை, பெரியப்பா பற்றி பேசும்போது, அவரின் பெயரைச் சொல்லிவிட்டேன். சட்டென்று கோபமான அப்பா, என் தலையிலேயே அடித்தார். ’அவருக்கு நீயா பேரு வைச்சே’ என்று திட்டினார். அந்த அளவுக்கு பெரியப்பா மீது அப்பாவுக்கு பிரியமும் நட்பும் மரியாதையும் உண்டு.
நான் பெங்களூருவில் படித்தவன். எங்கள் பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில்தான் பெரியப்பா கலைஞர் வந்து தங்குவார். அவர் வந்திருக்கும் தகவல் தெரிந்து, பள்ளிக்கு கட் அடித்துவிட்டு, அவரைப் பார்க்கச் சென்றேன்.
உதவியாளரிடம் சொன்னேன். தலைவர் ஓய்வெடுக்கிறாரே என்றார். பள்ளிக்கு கட் அடித்துவிட்ட வந்த விஷயத்தைச் சொல்லச் சொன்னேன்.
உடனே கதவு திறந்தது.’வாய்யா… பிரபு… வாவா…’ என்று அன்புடன் அழைத்தார். ‘இங்கேதான் படிக்கிறியான்னு கேட்டார். ’இந்த ஹோட்டல்ல வடையும் சாம்பாரும் நல்லாருக்கும்’னு சொல்லி வாங்கிக் கொடுத்தார். ‘பள்ளிக்குக் கட்டெல்லாம் அடிக்கக்கூடாது’ன்னு சொல்லி, அனுப்பினார். எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் ஒன்றுதான்.
அப்பாவுக்கு சிலை வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார் பெரியப்பா கலைஞர். அதற்கு அவர் பட்டபாடு இருக்கிறதே. வந்த முட்டுக்கட்டைகளையெல்லாம் கண்டு கலங்கிப்போய்விட்டார். ஆனால் அத்தனை உறுதியுடன் இருந்தார். அந்த உறுதி என்பது, அவரின் மொத்த வாழ்க்கையிலும் அரசியலிலும் ஆட்சியிலும் இருந்தது. அதுதான் கலைஞர் பெரியப்பா . தன்னுடைய நண்பனுக்கு சிலை அமைத்துப் பார்த்து, நண்பனைப் பெருமைப்படுத்தினார் பெரியப்பா.
பிறகு வைக்கப்பட்ட அப்பாவின் சிலை, ஏதேதோ காரணங்கள் சொல்லி அகற்றப்பட்டது. வேறொரு இடத்தில் வைக்கப்பட்டது. அந்த விழாவுக்கு எங்கள் குடும்பம் போயிருந்தது. வேறு வழியில்லை எங்களுக்கு. அந்த இடமாவது கிடைக்கவேண்டுமே என்கிற தவிப்புதான் காரணம்.
இந்த இடத்தில்,எங்கள் அண்ணன் ஸ்டாலினுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள்தான் வரவேண்டும். வருவீர்கள். அப்பாவின் சிலையை எடுத்து, உரிய இடத்தில் வைப்பீர்கள். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார் பிரபு.
இதைப்பார்த்து அரங்கிலிருந்த மு.க.ஸ்டாலின உட்பட பலரும் கண் கலங்கினர்.