ஆதித்தமிழன் அயோத்திதாசப் பண்டிதர் நினைவுநாள் இன்று (மே 5 ).

“தமிழ்த் தேசியத்தின் முன்னோடி” அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள் (5.5.1912)

விடுதலையொன்று வேண்டும்; அதுவும் தொல்குடி தமிழருக்கே முதலில் வேண்டும், என்று முழக்கமிட்டவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார். இவர் இந்திய அடையாளத்தோடு கூடிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையென்பதை மறுத்து தமிழ்மொழி அடையாளத்தை முன்னிறுத்தியவரும் கூட!

அவர் நடத்திய “ஒருபைசா தமிழன்” ஏடு இதற்கோர் சான்றாகும். 19.6.1907 முதல் தொடங்கப்பட்ட இவ்வேட்டை ஒரு கோடிப் பொன் மதிப்பிற்குரியது என்றார். முதல் இதழிலேயே ‘தமிழ்வாழ்த்து’ எனும் கவிதையில் அயோத்திதாசர் கூறியது பின் வருமாறு:
“ஒரு பைசாத் தமிழனிவனு தவானென்பார்
ஒரு பைசாத் தமிழருமை யறியாமாந்தர்
ஒரு பைசாத் தமிழிலுண்மை யறிவாராயின்
ஒரு கோடிப் பொன்னி தென்றுரைப்பர் மாதோ”

பின்னர் ஓராண்டு கழித்து, 28.8.1908ஆம் ஆண்டில் ஒரு பைசாவை நீக்கி விட்டு “தமிழன்” என்ற பெயரில் இதழை நடத்தி வந்தார். தமிழகத்தில் அன்றைய காலத்தில் வடமொழியில் பெயர் சூட்டி தமிழ் இதழ்கள் வந்து கொண்டிருந்தன. அது மட்டுமின்றி இந்தியா, சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் பார்ப்பனீய கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்தும் எழுதி வந்தன. அயோத்திதாசர் இவற்றுக்கு எதிராக, “வேதங்களும் சாத்திரங்களும் எதற்கு? மக்களை சீர்திருத்தி செவ்வைப்படுத்துவதற்கேயாம். அத்தகைய வேதம் என்பது சகல மக்களும் பெறுவதாக இருப்பது நலமா? அவற்றைப் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது, என்பது நலமா?” என்று வினா எழுப்பினார்.

ஆதிக்க சாதியினர் ‘இந்து ஒற்றுமை’ பேசியபடி ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்ற போது, “சுத்த ஜலம் மொண்டு குடிக்க விடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்! உங்கள் சத்துருக்கள் செய்த தீங்கினை மறந்து விடாதீர்கள்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளும்படி எழுதினார்.

தமிழ் மறுமலர்ச்சியில் சைவ மதத்தின் பங்கை மறுப்பதற்கில்லை. ஆனால் அது தன்னளவில் பார்ப்பனீய வடமொழி எதிர்ப்போடு சுருக்கிக் கொண்டது. அயோத்தி தாசரோ தமிழ்மொழி மறுமலர்ச்சிக்கு பெளத்த மதத்தை துணைக் கருவியாக்கி போராடினார். அதன் மூலம் ஒடுக்கப்பட்டோர் விடுதலையைக் காண முற்பட்டார்.

1881இல் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதில் ‘பஞ்சமர்’ என்று பதிந்திடாது ‘ஆதித்தமிழன்’ என்று பதிந்திடும்படி வேண்டுகோள் விடுத்தார். 1785ஆம் ஆண்டில் அவரது பாட்டனார் பட்லர் கந்தப்பன் அவர்கள் வைத்திருந்த திருக்குறள், நாலடி நானூறு, அறநெறித் தீபம் முதலிய சுவடிகளை ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் துரை என்பவரிடம் கையளித்தார். இவற்றைக் பெற்றுக் கொண்ட எல்லீஸ் துரையோ தான் பொறுப்பு வகித்த தமிழ்ச்சங்கம் மூலம் அச்சில் கொண்டு வந்து தமிழர்களிடம் அவற்றைப் பரப்பிடலானார். இது மட்டுமல்லாமல் அயோத்திதாசர் பள்ளிகளில் திருக்குறள், திரிகடிகம், நாலடியார் போன்ற நூல்களை கற்க ஏற்பாடு செய்திடவும் கோரிக்கை விடுத்தார்.

சாதி, மதம் குறிக்காமல் மொழியின் பெயரால் அமைப்பு தோற்றுவிக்கும்படியும் வேண்டினார்.

“ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிறுத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர், வன்னியரும் ஆதி தமிழரென்பர், நாடாரும் ஆதி தமிழரென்பர், வேளாளரும் ஆதி தமிழரென்பர்” என்றார்.

1907ஆம் ஆண்டில் இக்கருத்தை அவர் வலியுறுத்தியதை நோக்கும் போது அனைத்து தமிழரும் சாதி விடுத்து தமிழராய் ஒன்றிணைய வேண்டுமென்பதே அவரின் இறுதி விருப்பமாக இருந்துள்ளது. சாதி ஒழித்து தமிழராய் தலை நிமிர அவரின் நினைவு நாளில் உறுதியேற்போம்.–கதிர்நிலவன்.

Leave a Response