இன்னொரு காஞ்சனா வாகத் தயாராகியிருக்கும் கோப்பெருந்தேவி.

 தமிழகத்தில் கமல், ரஜினி படங்களைவிட பேய், பிசாசு படங்களுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து கொண்டிருந்தன பேய்ப் படங்கள், இப்போது வாரத்திற்கு ஒரு பேய்ப் படம் வருகிறது.

இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ… மனசு நிறைய சந்தோஷத்தோடு வா’ என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்துவிழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். காஞ்சனா 2 ன் வருமானத்தைக்  கேட்டால், ஆவியுலகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு இருக்கிறது! ஒரு கோடி பணம் போட்டவர்களுக்கெல்லாம் நாலு மடங்கு கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் காஞ்சனா 1 ல் நடித்தவர்களையும், காஞ்சனா 2 ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற அரண்மனை படத்தில் நடித்தவர்களையும் தேடித் தேடி பிடித்துப் போட்டு ‘கோப்பெருந்தேவி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி. கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று நீண்டு கொண்டே போகிறது நட்சத்திர கூட்டம்.

நகைச்சுவை, பயம், வரலாறு என்று  ஏகப்பட்ட வர்ணங்களை குழைத்திருக்கிறாராம் சங்கர் பழனிச்சாமி. தமிழ்த்திரைஉலக வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய புண்ணியவானும் இவர்தான். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கு. அதுக்காகவே இந்த படத் தயாரிப்புக்கு ரெண்டு வருஷம் எடுத்துகிட்டேன் என்கிறார். ஆராத்யா என்றொரு அட்டகாசமான நாயகியை  கேரளாவிலிருந்து இறக்கியிருக்கிறார்கள். ஆரம்பகால நயன்தாராவை பார்த்த மாதிரியே இருக்கிறார் இவரும். படத்தில் இவர்தான் பேய்.

காஞ்சனா2 ன் வெற்றி ஆந்திராவிலும் தொடர்வதால், கோப்பெருந்தேவிக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் நிறைய எதிர்பார்ப்பு. விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்தப்படத்தை வாங்க போட்டியே நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே படம் மே மாதத்தில் வந்துவிடும் என்கிறார்கள்.

காஞ்சனா வெளியே,  கோப்பெருந்தேவி உள்ளே.

Leave a Response