
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சினிமா தொழிலாளர் சம்மேளனம், நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில் சென்னை காமராஜர் அரங்கில் தொடங்கியது.
இதில் ரஜினி, மு.க.ஸ்டாலின், நாசர், ராதாரவி, விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, அம்பிகா, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரேவதி, தாணு, கே.டி.குஞ்சுமோன், சுஹாசினி, விஜயக்குமார் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனத் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் ரஜினி பேசியதாவது…
கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுக்காலமாகக் கட்சியைக் கட்டிக்காத்தவர்.எத்தனையோ துரோகங்கள் வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. அ.தி.மு.க-வின் ஆண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தோடு தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். தமிழர்கள் யாரையும் மறக்கமாட்டார்கள் என்பதை கருணாநிதி மறைவின்போது உணர்ந்துகொண்டேன். அதைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. என்னுடைய நண்பர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் இந்தியாவே வந்தது. அதில் ஒரு குறை. கவர்னரிலிருந்து எல்லாருமே வந்தனர்.
தமிழ்நாட்டின் முதலைமச்சர் அங்கு வர வேண்டாமா, அங்கு இருந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவா ஏன் போகவில்லை. தமிழக அமைச்சரவையே பங்கேற்க வேண்டாமா. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். கடைசியில் ஸ்டாலின் குழந்தையைப்போல கண்ணீர்விட்டது என்னால் தாங்க முடியவில்லை. கருணாநிதிகூட நான் பல நாள்கள் செலவழித்தது எனக்கு சந்தோஷம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
இவ்வாறு அவர் பேசினார்.


