கலைஞருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்

கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம்….

கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மரணச் செய்தி கேட்டு பெருந்துயர் அடைந்துள்ளோம். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழ் மக்களின் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றது.

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அரை நூற்றாண்டு கண்ட நீண்ட அரசியல் வரலாறு உண்டு. ஐந்து தடவைகள் தமிழ் முதலமைச்சராகவும், அறுபது ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராகவும் மரணிக்கும் வரை இருந்தவர்.

தமிழக வரலாற்றில் இந்திய சுதந்திரத்திற்கு பிந்திய காலத்தை, இவரைப்பிரித்து பார்க்க இயலாது. சிறுவயதிலேயே அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர், தந்தை ஈ.வே.ரா பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பூர்வ அரசியலில் ஈடுபட்டவர். அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக பாடுபட்டவர். பெண்கள் கல்வி, பெண்ணுரிமை ஆகியன இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த முன்னேற்றத்தின் அச்சாணியாக கலைஞர் திகழ்ந்தவர்.

கணினி தொழில்நுட்பத்தினை தூரநோக்கு சிந்தனையுடன் உணர்ந்த இந்தியாவின் மூத்ததலைவர்களில் ஒருவரும், மிகச்சிறந்த நிர்வாகியும், மிகச்சிறந்த அமைப்பாளர் எனும் பெருமை இவருக்குண்டு.

திராவிட முன்னேற்றக் கழகத்தை உறுதியான கட்டமைப்பாக உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. இன்று இந்தியாவில் இருக்கும் எந்தவொரு தலைவரையும் விடவும் அரசியல் அனுபவத்தாலும், அரசாங்கம் நடைமுறையாலும் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு முன்னணித் தலைவராவார்.

தமிழக மக்களின் மேன்மைக்காகவும், தமிழ்மொழியின் உரிமைக்காவும் பாடுபடுட்டதுடன், தமிழ்மொழியை செம்மொழியாக பிரகடனப்படுத்திய இவருடைய பணி மகத்தானது.

இலக்கியம், நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் பன்முக ஆளுமை கொண்டராக திகழ்ந்தவர். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தவர்.

ஈழத்தமிழர் விடயத்தில் 1956ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஈடுபட்ட வரலாறு இவருக்குண்டு. இந்திய இராணுவம் இலங்கையில் ஈழத்தமிழ் மக்களின் மீது புரிந்த போர் குற்றங்கள் காரணமாக, அவ்இராணுவத்தினரை வரவேற்காக அறத்துணிச்சல் கலைஞருக்கே உரியது. அதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தவறியவர் என்கின்ற மனவேதனையும் ஈழத்தமிழ் நெஞ்சங்களில் உண்டென்பதனையும் இங்கு பதிவு செய்வதனை தவற இயலாது.

கலைஞரின் இழப்பு கவலைக்குரியது. அன்னாரின் இழப்பால் துயருற்றிக்கும் அனைவரது கரங்களை இறுகப்பற்றிக் கொள்கின்றோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கற் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response