ஆகஸ்ட் 12 அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் சீமான் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார. இச்சந்திப்பு அம்பத்தூர், பிஎஸ்வி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது…
பாரத ரத்னாவை நாங்கள் ஒருபோதும் விருதாக ஏற்பதில்லை. விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று நாட்டிற்காகச் செக்கிழுத்த எங்கள் பாட்டன் வ.உ.சி.க்கு அளிக்காத விருதை, விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளித்தார்கள். அதனால், அவ்விருதை நாங்கள் உயரிய விருதாக ஒருபோதும் பார்க்கவில்லை.
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. எங்கள் தத்துவம் தனித்துவமானது. அதனால், நாங்கள் எப்போதும் தனித்துதான் போட்டியிடுவோம். எங்கள் தத்துவத்தையும், கொள்கையையும் ஏற்று எங்களோடு இணைய வந்தால் எவரையும் இணைத்துக் கொள்வோம். திராவிடக் கட்சிகள், இந்தியத் தேசியக் கட்சிகளோடு இணைவது சாத்தியமில்லை.
டி.வி.எஸ். நிறுவன உரிமையாளர் வேணுசீனிவாசன் குற்றமற்றவரென்றால் அவராக முன்வந்து முன்பிணை பெறவேண்டிய தேவையென்ன வந்தது? நாங்களெல்லாம் முன்பிணை பெற்றிருக்கிறோமென்றால் எங்கள் மீது போராட்ட வழக்கிருக்கிறது என்பதால்தான்.
கோயில்களில் சிலைக்கடத்தல் கோயில்களிலுள்ள குருக்களுக்குத் தெரியாமல் நிகழுமா? எத்தனையோ வழக்குகளுக்கு மத்தியப் புலனாய்வு விசாரணை கோரியபோது விசாரணையை மாற்றித் தர மறுத்து தமிழகக் காவல்துறையின் விசாரணையே போதும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.
இவ்விவகாரத்தில் காவல்துறையின் மீது நம்பிக்கையற்று மத்தியப் புலனாய்வு விசாரணை கோருவதை எவ்வாறு ஏற்பது? முதல்வருக்கே தனது துறையின் மீது நம்பிக்கையில்லையென்றால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.? பலரைத் தப்பிக்க வைப்பதற்காகத்தான் விசாரணையைத் தமிழக அரசு மாற்ற முனைந்தது.
பொன் மாணிக்கவேல் விசாரணை பலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாலேயே அவரை மாற்றத் துடிக்கிறார்கள். அவர் நேர்மையாக இருப்பதுதான் ஆட்சியாளர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. ஐயா சகாயத்திற்கு என்ன நிகழ்ந்ததோ அதேதான் பொன்.மாணிக்கவேலுக்கும் நிகழுகிறது.
திருமுருகன் காந்தி என்ன தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டாரென வழக்குத் தொடுக்கிறார்கள்.? ஒரு அரசுக்கு எதிராகப் பேசுவதே தேசத் துரோகமென்றால் அது அரசா? அரசு என்னவேண்டுமானால் செய்யலாம். மக்கள் அதற்கு எந்த எதிர்வினையுமாற்றக் கூடாது என்பதை எப்படி ஏற்பது? சேலத்தில் மக்கள் முன்னிலையில் என்னைக் கைதுசெய்தார்கள் என்றால் அதன்மூலம் மக்களை மறைமுகமாக அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் அஞ்சாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. அதனால், இதனையெல்லாம் அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.