தமிழ்ச் சமுதாயத்துக்கு அறிவுமதி தந்த கொடை தங்கத்தமிழ்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் “சங்கத் தமிழுக்கு” நூல் வெளியிட்டு விழா நடந்தது.

படைப்பாளிகள் கவிஞர் அறிவுமதி மற்றும் டிராட்ஸ்கி மருது

பேரவையில் பொதுவாக புத்தகங்கள் வெளியிடுவது இல்லை. பலரும் ஒவ்வோரு ஆண்டும் நிர்வாகக் குழுவில் கேட்பார்கள், அதனை அன்போடு மறுத்துவிடுவார்கள். காரணம் பேரவையின் மாண்பு மிக மிக முக்கியம் என்பதால்.

ஆனால் இந்தாண்டு பேரவை வரலாற்றில் முதன் முறையாக “சங்கத் தமிழுக்கு” புத்தக வெளியிட்டு விழா – எண்ணற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்பு.

சங்க இலக்கியப் பாடல்களுக்கு தமிழுரை கவிஞர் அறிவுமதி – அந்த கவிதை மற்றும் பொருளுக்கு வண்ணம் தீட்டியது டிராட்ஸ்கிமருது!

கவிஞர் அறிவுமதிக்கு நீண்ட வருடங்களாக “சங்கத் தமிழை” மிக எளிமையான வரிகளில் எல்லோருக்கும் புரியும்வண்ணம் அழகுத் தமிழில் “பொருளுரை” எழுத வேண்டும் என்பது கனவு. அந்த கனவு டெக்சாஸ் மாநில பெரும் தொழில் அதிபர் பால்பாண்டியன் வடிவில் அறிவுமதியின் கனவு நிறைவேறியது அமெரிக்க மண்ணில்.

கணியன் பூங்குன்றனார், நற்றினை வரிகளுக்கு,
ஒளவையாரின் குறுந்தொகை வரிகளுக்கு,
கபிலரின் குறுந்தொகை வரிகளுக்கு,
கோவூர் கிழாரின் புறநானூறு வரிகளுக்கு,
காக்கைப்பாடினியார் நச்செள்ளையாரின் பதிற்றுபத்து வரிகளுக்கு,
ஓக்கூர் மாசாத்தியாரின் குறுந்தொகை வரிகளுக்கு

கவிஞர் அறிவுமதி மிக எளிமையான தமிழ் அமுதத்தில் எழுத, அதற்கு வண்ணம் வண்ணமாய் காட்சி கோவையாய் ஓவியர் மருது வண்ணங்களை தீட்டி இந்த “தங்கத் தமிழை” படைத்து இருக்கிறார்கள்.

சங்கத் தமிழில் உள்ள சில பாடல்களில் “ஓரே ஒரு வரிக்கு” ஒரு பக்கம் பொருளுரை எழுதி இருக்கிறார்.

மிகப் பெரிய பாடலுக்கு – ஒருசில வரிகளில் பொருளுரை சொல்லி விட்டார்!

எடுத்துக்காட்டாக,

”மரம் சா மருந்தும் கொள்ளார்” – கணியன் பூங்குன்றனார், நற்றினை வரிகளுக்கு –

”மரத்தை ஒருவன் எப்படி நேசித்து அதனைப் போற்றி பாதுகாக்கிறான்” என்பதை மிக அருமையாக பொருள் உரைத்துள்ளார்.

இன்னொரு பாடலில்

”உன்னத்துப் பகைவன் எங்கோ” கபிலரின் வரிகளுக்கும் – மரத்தை ஒரு மன்னன் [செல்வக்கடுங்கோ வாழியாதன்] எப்படி அந்த மரத்தை எதிரியாக பார்க்கிறான் என்பதையும் விளக்கியுள்ளார் அறிவுமதி அண்ணன்.

தமிழ், ஈழம், குமரி, அரசன், மான், மரம், கிளி, போர் வீரன், காதல், பெரியார் – எப்படி எல்லாவற்றையும் “சங்கத் தமிழ்” பாடல்களுக்கு “தங்கத் தமிழில்”
தொடர்பு இட்டு, எளிமை படுத்தியுள்ளார் கவிஞர்.

”தங்கத் தமிழுக்கு” உழைத்த நல் உள்ளங்களுக்கு அண்ணன் முகவுரையில் பாராட்டு தெரிவித்து உள்ளார் – தொழில் அதிபர் பால் பாண்டியன், மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்க உறுப்பினர் செளந்தர், இந்த விழாவில் வெளியிட பெரிதும் உதவிய பேரவை துணைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி இப்படி பலருக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இந்த சங்கத் தமிழ் “தங்கத் தமிழ்’ புத்தகம் கல்லூரி இளங்கலை, முதுகலைக்குப் பாடமாக வைக்கப் பட வேண்டும்.இதனைப் படித்து தமிழ் ஆர்வம் உள்ள பலரும், மேலும் பல சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு மிக எளிமையாக பொருளுரை எழுதுவார்கள். அதற்கு இந்தப் புத்தகம் மிகவும் ஊக்கமாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.

மாணவர் நகலகம் – அய்யா அருணாசலம் இருந்து இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து இருப்பார்!

பேரவை வரலாற்றில் இது மறக்க முடியாத தருணம்.

நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த “சங்கத் தமிழின்” “தங்கத் தமிழ்” மிகப் பெரும் கொடை.

– மயிலாடுதுறை சிவா
வாசிங்டன்

Leave a Response