இந்திய, தமிழக அரசுகள் நீண்டநாள் நிலைக்காது – சீமான் அதிரடி

சேலம் – சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிரான கருத்துக்களைச் சமூக வலைதளங்களில் தெரிவித்ததற்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சேலம் – சென்னை இடையே அமைக்கப்படவிருக்கும் புதிய 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பொய் வழக்குகளைத் தொடுத்து கைதுசெய்யப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுச் செயல்படும் இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளின் எதிர் கருத்துகளுக்கே இவ்வளவு அடக்குமுறை என்றால் சாதரணப் பொதுமக்களின் எதிர் கருத்துகளை எப்படிக் கையாள்வார்கள் என்று எண்ணும்போது விடுதலைப்பெற்ற சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமோ? இல்லை சர்வதிகார ஆட்சியின் கீழ் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழாமலில்லை. இத்தகைய அடக்குமுறையினால் தமிழ் மக்களின் உணர்வெழுச்சி உரிமைப் போராட்டங்களை முடக்கிவிட முடியாது என்பதைத் தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக, “சேலம் – சென்னை இடையே அமையவிருக்கும் புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களை நம்பாதீர்கள். 8 வழி சாலை வந்தால் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்வளர்ச்சி ஏற்படும்” என்கிறார். ஒரு சாலை வருவதால் மட்டுமே அப்பகுதியில் எப்படி வளர்ச்சி ஏற்படும்? ஏற்கனவே உள்ள சேலம் 4 வழிச்சாலையால் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கம் பற்றிச் சட்டசபையில் புள்ளிவிவரங்களோடு பேசுகிறார் முதல்வர், வருங்காலங்களில் மக்கள் தொகை பெருகும்பொழுது அத்தியாவசிய தேவையான தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றிப் பேசவேண்டியவர். நீரை விட்டுவிட்டு மகிழுந்துகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் கேட்டதோ காவிரியில் கொஞ்சம் தண்ணீர், அரசு கொடுப்பதோ தார்சாலை.

வழுவழு சாலையில் பயணிக்கும் வண்டிகளின் தேய்மானம் பற்றியும், எரிபொருள் சேமிப்பு பற்றியும் கணக்கிடும் இவ்வரசு, சிறுக சிறுக தாங்கள் சேமித்து வாங்கி வைத்த நிலமும் உழைத்து தேய்ந்து வளர்த்த பயிர்களும் மரங்களும் கணக்கில்லாமல் பறிபோவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் விடுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது மிக வேதனையான உண்மை. ஏற்கனவே இருக்கும் 4 வழி சாலையில் சுங்கச்சாவடி என்ற பெயரில் நாள்தோறும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் புதிதாக 8 வழிச்சாலை எதற்காக? யாருக்காக? எதைக் கொள்ளையடிப்பதற்காக? மக்கள் விரைவாகப் போவதற்குத் தான் சாலை என்றால் இந்தச் சாலையில் பயணிக்கும் மக்களுக்குச் சுங்கக்கட்டணம் இருக்காது என்று அரசு அறிவிக்குமா?

சாலை வழி, தொடர்வண்டி வழி கடல் வழி மற்றும் வான் வழிப் போக்குவரத்துகளை ஒன்றிணைத்து வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பேரழிவுத் திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த 8 வழி சாலைகள். கணக்கில்லாத ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பல கிராமங்கள் அழிக்கப்பட்டு, பல ஆயிரம் மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு, காடுகள், மரங்கள், மலைகள் தரைமட்டமாக்கப்பட்டு அதிலுள்ள இரும்பு, தாமிரம், பிளாட்டினம், மேக்னசைட் போன்ற கனிமங்களைக் எடுத்து உள்நாட்டு-வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்குத் தடையில்லாமல் சென்று தாரைவார்க்க வளர்ச்சி என்ற முகமூடி போடப்படுகிறது, அதற்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி தேசத்துரோகி பட்டமளித்துக் கைது செய்கிறது அரசு.

ஒரு தனி முதலாளி இலாபம் சம்பாதிக்க, தனக்கு வாக்குச் செலுத்தி பதவியில் உட்கார வைத்த மக்களையே சுட்டுக்கொல்கிற கொடுஞ்செயல் இங்குதான் நடக்கிறது. அதிகாரத்தையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ள எந்த நிலைக்கும் போய் எதையும் செய்யத்தயாராக இருக்கிறது இவ்வரசு. அதன் தொடர்ச்சி தான் இந்தக் கைது நடவடிக்கைகள். தமிழ் இளம் தலைமுறையினருக்குப் போராட வேண்டும் என்ற எண்ணமே வந்துவிடக்கூடாது என்று இந்த அதிகாரம் நினைக்கிறது. இது ஜனநாயகத்திற்குப் பேராபத்து.

மக்களுக்காகப் போராடிக்கொண்டிருந்த குரல்களை நிறுத்தவேண்டும் என்பதைத் தவிர, சட்டவிரோத கைது நடவடிக்கைகளுக்கு வேறு காரணமில்லை. போராடுபவர்களைச் சமூக விரோதிகள், நக்சல்கள், பயங்கரவாதிகள் என்று பழிசுமத்துகிற இழிசெயலை ஆட்சியாளர்கள் உடனடியாகக் கைவிடவேண்டும். உரிமைகளுக்காகப் போராடும் மக்களைப் பயங்கரவாதிகள் என்று கட்டமைப்பது சர்வதிகார செயல்பாடு. போராட்டத்திற்கு ஆதரவாக முன்நிற்பவர்கள் அனைவரையும் கைது செய்து மக்கள் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் இவ்வரசு மக்கள் மனங்களை வெல்லாது ஆட்சியும் அதிகாரமும் நீண்டநாள்களுக்கு நிலைக்காது என்பதை உணரவேண்டும். இல்லை வெகுவிரைவில் மக்கள் வாக்குகளால் உணர வைப்பார்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டதும் அதற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response