சங்கத்தமிழை தங்கத்தமிழாக்கிய பாவலர் அறிவுமதி

ஆனந்தவிகடன் மற்றும் சில ஏடுகளில் தொடராக வெளிவந்த பாவலர் அறிவுமதியின் தங்கத்தமிழ் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது.

தேன்கூட்டிலிருக்கும் சுவைமிகு தேனை, கூட்டிலிருந்து பிரித்தெடுத்து ருசிக்கும் வாழ்வு வாய்க்கப் பெறாத தமிழ்மக்களுக்கு தேனின் சுவை போன்ற நம் தொன்மம் அறிந்து கொள்ள, சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களை எளிமையாக்கி அச்சுவையை பாமரரும் சுவைத்துணரபாவலர் அறிவுமதி ஆற்றிய பெரும்பணியே தங்கத்தமிழ்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டில் ஜூலை முதல்நாளன்று தங்கத்தமிழ் நூல் வெளியிடப்பட்டது.

சங்கத்தமிழின் தங்கத்தமிழுக்கு எழிலுரை எழுதிய ஓவியர் மருது உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழன்னையின் மணிமகுடமாய்த் திகழும் இந்நூல் தமிழுலகத்துக்குப் பெரும் சொத்து.
தங்கத்தமிழ் நூலில் உள்ள ஒரு பாடல்….

தங்கத் தமிழ் – 13
தமிழுரை – அறிவுமதி, எழிலுரை – டிராட்ஸ்கிமருது

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்பதுங் குடியே!

– கோவூர் கிழார், புறநானூறு – 45
திணை – வஞ்சி, துறை – துணை வஞ்சி

இளவேனிற்கால வாழ்த்துகளோடு
உங்கள் அம்மா
தமிழ்த்தாய் பேசுகிறேன்

ஆழிப்பேரலையும் சூழ்ச்சிப் பேரலையுமே
உங்களைச் சூறையாடிக்கொண்டிருக்கின்றன.

அன்று…
சேர சோழ பாண்டியர்களாக
முரண்பட்டு
மோதிக்கொண்டிருந்தீர்கள்.

இன்று…
சாதிகளால் கட்சிகளால்
முரண்பட்டு
மோதிக்கொண்டிருக்கிறீர்கள்.
எந்தக் காலகட்டத்தில்?

‘தமிழ்ச் சாதி

தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும்
கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும்
மாய்ந்திடுஞ் செய்தியும்’
எங்கெங்கிருந்தோ நாளும் நாளும்
வந்துகொண்டிருக்கும்
காலகட்டத்தில்!

‘விதியே… விதியே…
தமிழ்ச் சாதியை
என் செயக் கருதி
இருக்கிறாயடா?’ என்று
இன்றும் என்னைப் புலம்பியழ வைத்துவிட்டீர்களே
பிள்ளைகளே!

பதிற்றுப்பத்தில்… இரண்டாம் பத்து.
என் பிள்ளை
இமயவரம்பன் நெடுந்சேரலாதனை
குமட்டூர் கண்ணன்
பாடினான்.

என்ன பாடினான்?

”மன்னா!
செழித்து வளர்ந்து
அறுவடைக்குத் தயாராக இருந்த
எதிரியின் வயல்களை எரித்து முடித்தாய்.

குடிநீருக்காகப் பாதுகாக்கப்பட்ட
நன்னீர்க் குளங்களை
கால்நடைகளைவிட்டுக் கலக்கிச்
சேறாக்கிக் கெடுத்தாய்.

அடுப்புகளின் புகைமூட்டத்தைவிட
எதிரிகளின் ஊர்களை
நீ எரித்தாயே…
அந்தப் புகைமூட்டம்தான் மன்னா
பெரிது.
அடடா..! உன் வீரமே வீரம்!”

அழித்த மன்னன் யார்?
தமிழன்!
அழிக்கப்பட்ட வயல்கள், ஊர்கள், குளங்கள்
யாருடையவை?
தமிழர்களுடையவை!

ஆம்…
தமிழர்களுக்குத் தமிழர்கள்
அடித்துக்கொண்டு
அழிந்த கதையைத்தான்
குமட்டூர் கண்ணன் பாடினான்.

அதனால்… அவனுக்கு என்ன கிடைத்தது?
என்ன கிடைத்ததா?

ஐந்நூறு ஊர்கள் அந்த மன்னனால்
அந்தப் புலவனுக்குத் தரப்பட்டன.
முப்பத்தெட்டு ஆண்டுகள்
அந்த மன்னனால் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில்
ஒரு பகுதி
அந்தப் புலவனுக்கு வழங்கப்பட்டது.

மற்றொரு மன்னன்
மற்றொரு புலவனுக்கு
நூறாயிரம் பொற்காசுகளும்…
‘நன்றா’ என்னும் குன்றின் மேல்
ஏறி நின்று
தன் கண்ணிற்கண்ட
நாடுகளையெல்லாம் வழங்கினான்.

தமிழர்களை, தமிழர்கள்
அடித்துக்கொள்ள வைத்துவிட்டு
அதில் யார் யாரோ
எப்படி எப்படியெல்லாமோ
நம்மை
ஏமாற்றி வாழ்ந்திருக்கிறார்களே அம்மா!

ஆம்… பிள்ளைகளே!
இப்போதும் இந்த நொடியிலும்
நீங்கள்
ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

அன்று…
புறநானூற்றில்
கோவூர் கிழார் எனும் என் தமிழ்ப்பிள்ளை
நலங்கிள்ளியையும்
நெடுங்கிள்ளியையும் பார்த்துக் கூறிய
அதே அறிவுரையைத்தான்
இன்று… இந்தச் சூழலில்
நானும் உங்களுக்குச்
சொல்ல வேண்டியிருக்கிறது.

”சோழனே!
உன்னை எதிர்த்து நிற்பவன்
பனம் பூ சூடிய
சேரன் அல்லன்.
உன்னை எதிர்த்து நிற்பவன்
வேப்பம் பூ சூடிய
பாண்டியனும் அல்லன்
நீ சூடியிருப்பதும்
ஆத்திப் பூ…
அவன் சூடியிருப்பதும்
ஆத்திப் பூ!

அவ்வாறெனில்…
உங்களுக்குள் நடக்கப்போகும்
இந்தப் போரில்
யாரொருவர் தோற்றாலும்
தோற்பது
உம் குடியே
உம் இனமே!”

பனம் பூ, வேப்பம் பூ, ஆத்திப் பூ
அனைத்துமே தமிழ்ப் பூக்களாகி
உலகத் தமிழர் என்கிற
உன்னதச் சொல்லாடல்
வாய்த்திருக்கிற இந்தச் சூழலில்
அம்மா தமிழ்த்தாய் கெஞ்சிக் கேட்கிறேன்…

பங்காளிச் சண்டையில் பகையாளிக்கு
அடிமையாகிவிடாதீர்கள்!

தமிழ் வளரும்…

Leave a Response