கால்பந்து – இறுதிவரை போராடி வென்றது பெல்ஜியம்

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் ஜூலை 2 ஆம் நாள் நடந்த இரண்டாவது நாக் அவுட் போட்டி பரபரப்புக்கு பங்கமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.

உலகத் தர வரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கும் பெல்ஜியம் ஜப்பானை ப்பூ என்று ஊதித் தள்ளிவிட்டுப் போகப் போகிறது என்றுதான் உலக கால்பந்து ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் போட்டியோ கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல நடந்து முடிந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கு மட்டும் பெட் கட்டியிருந்தால் நிச்சயமாக பணம் கட்டினவர்களுக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும். அந்த அளவுக்கு கலவரத்தை வரவழைத்துவிட்டார்கள் ஜப்பானிய வீரர்கள்.

பெல்ஜியம் அணி முதல் சுற்றில் பனாமாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், துனீசியாவை 5-2 என்ற கோல் கணக்கிலும், இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்திருந்தது.

ஜப்பான் அணி முதல் சுற்றில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. செனகலுடன் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. ஆனால் கடைசி லீக் போட்டியில் போலந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இருந்தாலும் உள் ஒழுங்கு புள்ளி அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் லீக் சுற்றில் அதிக கோல் அடித்த அணியும் பெல்ஜியம்தான். 9 கோல்களை அடித்துள்ளது.

இன்றைய போட்டியில் நிச்சயமாக பெல்ஜியம் எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இத்தனை கடினமாகப் போராடி ஜெயிக்கும் என்று ஜப்பானியர்களே நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள் ஜப்பான் வீரர்கள்.

போட்டி துவங்கிய முதல் நிமிடத்திலேயே ஜப்பான் அணி அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்தது. Shinji Kagawa என்ற ஜப்பான் வீரர் கோலுக்கான ஷாட்டை அடித்து ஆரம்பித்து வைத்தார். ஆனால் பந்து வெளியில் பறந்தது.

9-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு ஷாட். ஜப்பானின் Takashi Inui அடித்த பந்தும் வலைக்கு மேலே பறந்து சென்றது.

15-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் wintseel அடித்த பந்து ஜப்பானின் கோல் போஸ்ட்டின் வலைக்கு மேலே பறந்தது.

16-வது நிமிடத்தில் ஜப்பானிய கோல் போஸ்ட் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும்வகையில் இரு அணி வீரர்களும் பந்தை உதைத்துத் தள்ளினார்கள். ஆனாலும் கோல் விழுகவில்லை.

20-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு அழகான ஷாட்டை அடித்தார் பெல்ஜியத்தின் Romelu Lukaku. ஆனால் பந்து வழக்கம்போல வலைக்கு மேலே பறந்தது.

பெல்ஜியம் அணி பந்தை தன் வசமே வைத்துக் கொண்டு முற்றும் முழுதுமாக ஜப்பானிய கோல் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் சரியான பாஸிங் கிடைக்காததால் கோல் போட முடியாமல் தத்தளித்தது.

24-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் Romelu Lukaku தொலைதூரத்தில் அடித்த பந்து மிகச் சரியாக ஜப்பான் கோல் கீப்பரின் கைகளுக்குப் போய்.. சட்டென்று நழுவி போஸ்ட்டை நோக்கி நகர.. கோல் கீப்பர் Eiji Kawashima அப்படியே சட்டென்று ஓடிப் போய் பந்தின் மீது விழுந்து கோல் விழுவதை தடுத்தார்.

26-ம் நிமிடத்தில் Eden Hazard அடித்த நேரடி ஷாட்டையும் ஜப்பானிய கோல் கீப்பர் பிடித்து கோலாகாமல் தடுத்துவிட்டார்.

27-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு ஷாட்டுகளை அடித்தார்கள் பெல்ஜியம் வீரர்கள். இரண்டையுமே ஜப்பானிய கோல் கீப்பர் துரிதமாகச் செயல்பட்டு தடுத்துவிட்டார்.

30-வது நிமிடத்தில் ஜப்பானின் Takashi Inui தலையில் முட்டி பெல்ஜியம் கோலுக்குள் தள்ளப் பார்க்க.. கடைசி நொடியில் பெல்ஜியம் கோல் கீப்பர் அதைப் பிடித்துவிட்டதால் மிக ஏமாற்றமானார்கள் பெல்ஜியம் ரசிகர்கள்.

35-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் wintseel அடித்த ஷாட் வழக்கம்போல வலைக்கு மேலே பறந்து சென்றது.

39-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் Eden Hazard-க்கு கட்டைக் கால் கொடுத்த ஜப்பான் வீரருக்கு மஞ்சள் அட்டையைக் கொடுத்த கதையோடு ப்ரீ கிக்கும் கிடைத்தது. ஆனால் பந்து திரும்பி ஜப்பான் வீரர்களின் கால்களுக்குப் போய்விட்டது.

43-வது நிமிடத்தில் ஜப்பான் கோல் போட முயற்சித்தது. Yuto Nagatomo அடித்த பந்தை பெல்ஜியம் கோல் கீப்பர் தடுக்க.. பந்து அவரது கையிலிருந்து நழுவ.. பின்பு மீண்டும் தாவி பந்தை பிடித்து பெருமூச்சுவிட்டார் கோல் கீப்பர்.

45-வது நிமிடத்திலும் லாங் ஷாட் ஒன்றை அடித்தார் பெல்ஜியத்தின் Thibaut Courtois. ஆனால் இதையும் ஜப்பானிய கோல் கீப்பர் பிடித்துவிட்டார்.

இடைவேளையின்போது இரு அணிகளுமே கோல் எதுவும் போடாமல் இருந்தன.

இடைவேளைக்கு பின்பு ஆட்டம் துவங்கிய இரண்டாவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் Genki Haraguchi தனக்கு பாஸிங் மூலமாகக் கிடைத்த பந்தை மிக அழகாக கோலுக்குள் தள்ளி முதல் கோலை போட்டு அப்ளாஸை அள்ளினார்.

பெல்ஜியம் வீரர்கள் மட்டுமல்ல.. கால்பந்து ரசிகர்கள் யாராலும் நம்ப முடியாத கோல் இது.

இதற்கடுத்த நிமிடத்திலேயே மீண்டும் ஒரு கோல் முயற்சியில் இறங்கியது ஜப்பான். இந்த முறை Shinji Kagawa அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு உள்ளே திரும்பியது.

50-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் Eden Hazard தொலைதூரத்தில் இருந்து அடித்த பந்தை ஜப்பான் கோல் கீப்பர் கைகளால் பிடித்து நிறுத்திவிட்டார்.

52-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்தது ஜப்பான். ஓரத்தில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை கோட்டுக்கு வெளியில் நின்று Takashi Inui அடித்து கோலாக்கினார். 2-0 என்பதை பெல்ஜியம் வீரர்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை.

இதன் பின்பு நடந்ததுதான் அதிசயம். ஆனால் உண்மை. எங்கிருந்துதான் இத்தனை வேகம் பெல்ஜியம் வீரர்களுக்கு வந்ததோ தெரியவில்லை. வேகம்.. வேகம்.. அப்படியொரு வேகத்தைக் கடைசிவரையிலும் காட்டினார்கள் பெல்ஜியம் வீரர்கள்.

61-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் Lukaku கோல் அடிக்கப் பார்க்க தலையில் முட்டியிருந்தால் நி்ச்சயம் கோலாகியிருக்கும். ஆனால் தலை கொடுக்க ஆள் இல்லாததால் முடியாமல் போனது.

64-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் Thibaut Courtois அடித்த பந்தும் கோல் கீப்பரால் பிடிக்கப்பட்டது.

68-வது நிமிடத்தில் இந்த 2018 உலகக் கோப்பை போட்டியின் மிகச் சிறந்த கோலை பெல்ஜியம் வீரர் Jan Vertonghen அடித்தார்.

கார்னர் ஷாட்டாக அடிக்கப்பட்ட பந்து பல முறை கீழேயும், மேலேயுமாக பறந்தது. கடைசியாக உயர்த்தியடிக்கப்பட்ட பந்தை Jan Vertonghen தனது தலையால் மேலே பார்த்து அடிக்க.. அது அப்படியே டிராவல் செய்து மிக அழகாக கோலுக்குள் போய் விழுந்தது. ஜப்பானிய ரசிகர்களே திகைத்துப் போனார்கள். அப்படியொரு அழகான ஷாட் அது..!

இதையடுத்து இடைவெளியே விடாமல் மீண்டும், மீண்டும் பெல்ஜியம் வீரர்கள் பந்தை தங்களுக்குள்ளேயே பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.

72-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பெல்ஜியம் அடித்தது. மிக அழகான பாஸிங்கில் கொண்டு வரப்பட்ட பந்தை உருட்டிப் பெருக்கினார்கள். பின்பு கார்னர் சைடில் இருந்து அடிக்கப்பட்ட அந்தப் பந்தை Maroaune Fellaini தன் தலையால் முட்டி கோலாக்கினார்.

இப்போது கோல் கணக்கு சமமானவுடன் ஜப்பான் வீரர்களும் பரபரப்பானார்கள். எப்படியாவது ஒரு கோலை போட்டுவிட வேண்டும் என்று துடித்தார்கள். வேகமெடுத்தார்கள்.

83-வது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் Eiji Kawashima அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. மீண்டும் இதே பந்தை திருப்பியடித்துவிட இந்த முறை பெல்ஜியம் கோல் கீப்பர் பிடித்துவிட்டார்.

85-வது நிமிடத்தில் அனல் பறந்தது. பெல்ஜியம் வீரர் Nacer Chadli அடித்த பந்து கோல் போஸ்ட்டுக்குப் போக கோல் கீப்பர் உதைத்து திருப்பியனுப்ப.. மீண்டும் கோல் போஸ்ட்டை நோக்கி பந்து வர..
மீண்டும் பந்தை பிடித்துவிட்டார் கோல் கீப்பர்.

90-வது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் Thibaut Courtois மிகப் பிரயத்தனப்பட்டு கோல் போட முயற்சிக்க இதுவும் தோல்வியடைந்தது.

கூடுதல் நேரமாக 4 நிமிடங்கள் கிடைத்தன.

இதில் ப்ரீ கிக் கிடைத்த வாய்ப்பில் ஜப்பானிய வீரர் ஹூண்டா அடித்த அழகான ஷாட்டை பெல்ஜியம் கோல் கீப்பர் பிடித்துவிட்டார். பிடித்த கையோடு தனது அணியினர் பக்கம் பந்தை உருட்டிவிட்டார்.

இந்தப் பந்தை உருட்டியபடியே ஓடிய பெல்ஜியம் வீரர்கள் மிகச் சரியாக 4-வது பாஸிங்கில் போட்டியின் வெற்றிக்கான கோலை மிக அழகாக அடித்தார்கள். Nacer Chadli தன் காலுக்கு வந்த வெற்றிக்கான பந்தை தனது இடது காலால் லேசாக உந்தித் தள்ளி கோலாக்கினார்.

ஸ்டேடியமே அதிர்ந்தது. மொத்தமாக அதிர்ச்சியானார்கள் ஜப்பானிய ரசிகர்கள். சில நொடிகளில் போட்டியும் முடிவடைய.. பெல்ஜியம் வீரர்களின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

நிச்சயமாக பெல்ஜியம் வீரர்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசுதான் இது.

இரண்டு கோல்களை நம்மை எதிர்த்து போட்டுவிட்டார்களே என்கிற வெறியில் பதிலுக்கு பதிலாக இவர்கள் அடித்த 3 கோல்கள் விலை மதிப்பில்லாதவை.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இடைவேளைக்கு பின்பு 5 கோல்கள் பதிவானது இந்தப் போட்டியில்தான்..!

வரும் 6-ம் தேதி நடைபெறும் கால் இறுதிப் போட்டியில் பெல்ஜியம்-பிரேசில் அணிகளுக்கிடையே போட்டி நடைபெறப் போகிறது.

– சரவணன்

Leave a Response