இறந்தவர்களுக்கு 30 ஆம் நாள் காரியம் செய்ய தடை – தொடரும் தூத்துக்குடி துயரம்

மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வரலாறு காணாத படுகொலைகள் நடந்தன. அதன் தாக்கம் இன்றுவரை குறையாமல் இருக்கிறது.

இந்நிலையில் மே 22 ஆம் தேதி இறந்தவர்களின் 30 ஆம் நாள் காரியம் செய்யக்கூட முடியாத நிலையில் அம்மக்கள் இருக்கிறார்கள்.

இதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஜெகத்கஸ்பர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு….

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் 30-வது நாள் நினைவஞ்சலியை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

ஆனால் தூத்துக்குடியில் பொது நினைவஞ்சலிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதோடு சுற்றி வளைப்பு, இரவு நேரத் தேடுதல் வேட்டை போன்ற மனிதநேயமற்ற கெடுபிடிகளால் குடும்பங்கள் நிம்மதியாக ஒன்றுசேரமுடியாத அசாதாரணச் சூழலையும் உருவாக்கி வைத்துள்ளது.

ஆதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களில் சிலரும், தூத்துக்குடி சமூகத்தின் பெரியோர்கள் சிலரும் கேட்டுக்கொண்டதன்பேரில் அவசர ஏற்பாடாக சென்னையில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்கிறோம்.

தூத்துக்குடிப் படுகொலைகளை நியாயப்படுத்தாத அரசியற் கட்சிகள் இயக்கங்களுக்கு அழைப்பும் சமர்ப்பித்துள்ளோம். நினைவஞ்சலி மூலம் பொது தமிழ்ச்சமூகத்தின் உணர்வுகளைப் பகிர்வதோடு, தொடரும் அநீதியான கெடுபிடிகளை முடிவுக்கு கொண்டுவரவும், ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தமிழகத்தின் பெருவாரியான கட்சிகள்-இயக்கங்கள் இணைந்து மீண்டும் வலியுறுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இந் நிகழ்வினைக் கருதுகிறோம்.

மிக முக்கியமாக ஆயதமேந்தாத அப்பாவி மக்களை சுட்டுத்தள்ளியும் அம்மக்களில் பலரை அடித்து நொறுக்கி நிரந்தரமாய் ஊனப்படுத்தியும் பயங்கரவாதம் புரிந்துவிட்டு/ நடந்துவிட்ட அக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்கிற குறைந்தபட்ச ஜனநாயக அற ஒழுக்கத்தை தவிர்த்து/ கைக்குழந்தைகளோடும் சென்று போராடிய பொதுமக்களை கலவரக்காரர்களாகவும், மக்கள் பிரச்சனைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்தவர்களை தீவிரவாதிகள்- பயங்கரவாதிகளாகவும் கட்டமைக்க முயலும் காவல்துறையின் வடிகட்டின அறப் பிறழ்ச்சிக்கு நவீன ஜனநாயக உலகில் இடமில்லை என்பதை தீர்க்கமாகச் சொல்கிற கடப்பாடும் பொதுமக்களாகிய நமக்கு உள்ளது.

ஆதலால் பேரளவில் தமிழ்ச் சொந்தங்கள் வந்து உணர்வெழுச்சியுடன் இணைந்திடவும் , இச்செய்தியை பலருக்கும் பகிர்ந்து உதவிடவும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வேண்டுகிறோம்.

நாள், இடம்: ஜூன் 20, புதன் மாலை 6.30 மணிக்கு CIT காலனி 2வது முதன்மைச் சாலையில் உள்ள கவிக்கோ அரங்கம்.

சென்னை வாழ் தூத்துக்குடி நெல்லை குமரி
மக்கள்சார்பில் நாம்-DEFEND DEMOCRACY என்ற பதாகை முழக்கத்தின் கீழ் இந்நிகழ்வினை திரு. தேவசகாயம் IAS Rtd வழிநடத்துதலில் ஒழுங்கு செய்கிறோம்.

அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒருமித்த குரல் மற்றும் நமது எழுச்சியான பங்கேற்பு அதிர்ச்சியிலும், ஆழ்ந்த மனக்காயங்களிலும், தொடரும் காவல்துறை கெடுபிடிகளிலும் நொந்துபோயிருக்கிற அம் மக்களுக்குப் பேராறுதல் தரும். ஆதலால் மிகவும் வேண்டி விரும்பி அழைக்கிறோம். நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response