பாலியல் பேராசிரியைக்கும் ஆளுநருக்கும் தொடர்பு?

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலாதேவி (46). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் கலைக் கல்லூரியில் 2008-ம் ஆண்டு முதல் கணிதத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

பேராசிரியை நிர்மலாதேவி தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பெயரைக் கூறி பாலியல் ரீதியில் தவறான வழியில் ஈடுபடும் வகையில் வற்புறுத்தி பேசிய ஆடியோ, அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது.

பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்யக் கோரி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நேற்று (ஏப்ரல் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த புகார் குறித்து தனியார் கல்லூரியின் நிர்வாகக் குழுச் செயலர் ராமசாமி, கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் ஆகியோரிடம் கூடுதல் எஸ்பி மதி, கோட்டாட்சியர் செல்லப்பா, வட்டாட்சியர் கார்த்திகாயினி, டிஎஸ்பி தனபால், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கூடலிங்கம் ஆகியோர் நேற்று காலை நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலர் ராமசாமி புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற கூடுதல் எஸ்பி மதி கூறும்போது, ‘கல்லூரி நிர்வாகத்திடமிருந்து முறையான புகார் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நிர்மலா தேவி மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

கல்லூரியில் மாணவர்கள் திரண்டு போராட்டம், போலீஸ் விசாரணை என இவ்விவகாரம் தீவிரமடையத் தொடங்கியதால் பேராசிரியை தலைமறைவானார். அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் வீட்டுக்குள் இருக்கிறாரா அல்லது வெளியில் தலைமறைவானாரா என்பது தெரியவில்லை. இத்தகவல் பரவியதையடுத்து, நிர்மலா தேவியின் வீட்டின் முன்பு பொதுமக்களும் போலீஸாரும் ஏராளமான நிருபர்களும் குவிந்தனர்.

இதற்கிடையே நிர்மலா தேவி மீது கல் லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் அவரிடம் விசாரணை நடத்த அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் வந்தபோது, வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு நிர்மலாதேவி பல மணி நேரம் வெளியே வர மறுத்தார்.

மாலை 6.45 மணி வரை பேராசிரியை நிர்மலாதேவி வீட்டு வாசலில் போலீஸாரும் நிருபர்களும் காத்திருந்தனர். மாதர் சங்கத்தினர் மற்றும் போலீஸார் அழைத்தும் பேராசிரியை நிர்மலாதேவி கதவைத் திறக்க மறுத்துவிட்டார். அதையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே செல்ல திட்டமிட்டனர்.

அப்போது வீட்டுக்குள் இருந்த நிர்மலாதேவியிடம் பேசிய போலீஸார், அவரை ரகசியமாக அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். அதையடுத்து, அப்பகுதியில் இருந்து நிருபர்களும் பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். வீட்டின் அருகில் செல்ல நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து, காவல்துறையினர் வீட்டு வாச லில் காரை நிறுத்திக்கொண்டு வீட்டுக்குள் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு தகவல் தெரிவிக்க, நொடிப் பொழுதில் கதவைத் திறந்து கொண்டு வாசலில் தயாராக நின்ற வாகனத்தில் நிர்மலா தேவி ஏறினார். அதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்துக்கும் அதைத்தொடர்ந்து, மகளிர் காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர் மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒழுங்கீனமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, இந்த விஷயத்தில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடாமல் இருக்கும் வகையில் இதுகுறித்து உடனடியாக விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆர்.சந்தானம், தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப்பின், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினராகவும இருந்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கும்போது, காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து விசாரணை தொடங்கியிருக்கும் நேரத்தில் அவசர அவசரமாக ஆளுநர், விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார்.

பேராசிரியை பேசிய ஆடியோவில், ஆளுநர் பற்றிப் பேசியிருக்கிறார். இந்நிலையில் அவரே விசாரணை ஆணையம் அமைத்திருப்பது கடும் எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக ஏப்ரல் 16 அன்று வெளியிட்ட அறிக்கையில்,
தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதுகுறித்து உள் துறை அமைச்சகம் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் தமிழக ஆளுநர் தனது நியமனங்களில் நெறிமுறைகளை மீறி செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் தகுதி, திறமையைத் தாண்டி முறைகேடான கைமாறுகளுக்காக இவை நடக்கிறதோ என்கிற சந்தேகமும், கவலையும் எழுவது இயல்பே.

என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Response