விஷால் தமிழகத்தைச் சேர்ந்தவரா? – அமைச்சர் கேள்வி

தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிரமிளா குருமூர்த்தி கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேடுதல் குழு பரிந்துரை அடிப்படையிலே இசைப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக பிரமிளா குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உள்நோக்கம் இருக்கிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரமிளா குருமூர்த்தியின் தந்தை தமிழர். தாயார் கேரளா. எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை.

2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட விஜயகுமார் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அப்போது ஏன் எதிர்க்கவில்லை?

இயக்குநர் பாரதிராஜா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று குறை சொல்லி இருக்கிறார். இப்போது தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. அதற்கு தலைவர் யார்? தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா?. முதலில் உங்கள் துறையை உங்களால் திருத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் விஷால் இருப்பதையே அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

Leave a Response