பார்ப்பனக்கும்பலின் கலவரங்களால், 16 கிலோமீட்டர் நடந்துவந்தோம் – நேரடி அனுபவப் பகிர்வு

2018 சனவரி முதல்நாளன்று மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818 -ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் பங்கேற்றனர். அந்தப் போரின் 200-வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித்மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியது. ஓர் இளைஞர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது. இந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இக்கலவரம் நடந்த அதே நேரத்தில் பீமாகோரிகாவின் வீரவணக்க நாள் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அம்மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சமூகச்செயற்பாட்டாளர் அதிஅசுரன் எழுதியுள்ள பதிவில்….

பாம்செஃப் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் வாமன் மேஷ்ராம், சிரோமனி அகாலிதள் (அமிர்தசரஸ்) தலைவரும், இந்திரா காந்தி படுகொலையின் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருமான பாராளுமன்ற உறுப்பினர் சிம்ரன்ஜித்சிங் மான், கர்நாடக லிங்காயத் மடத்தின் தலைவர்கள் என அகில இந்திய அளவிலான தலைவர்கள் நிறைந்த மேடையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிறைந்த அவையில் உரையாற்றினேன். 01.01.2018 பீமா கோரிகாவ் 200 வது வீரவணக்க நாளில், பீமா நதிக்கரை வெற்றிச் சின்னத்தின் அருகே நடந்த பாம்செஃப் மாநாட்டில் தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது.

அந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருமே பார்ப்பனர்களை முதன்மை எதிரிகளாகவும், இந்து மத வேதங்கள், சாஸ்திர, சம்பிரதாயங்களை முதன்மை எதிர்க் கருத்தியல்களாகவும் அறிவித்து, விளக்கிப் பேசினார்கள். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மாநாட்டுத் திடலின் அருகே தான் அகில பாரத பிராமண மகாஜனசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் கலவரத்தை நடத்தியது.

B.V.F என்ற பாம்செஃப் பின் காவல்படையின் பாதுகாப்பில், எந்தப் பரபரப்பும், சலசலப்பும் இன்றி மாநாடு அமைதியாக நடந்தது. வாகனங்கள் எரிக்கப்பட்டு புகை மண்டலம் சூழ்ந்த நிலையிலும்நிலை குலையாமல், எந்தவிதப் பதட்டமும் இன்றி மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு வராத மக்கள்கூட, பார்ப்பனப் பரபரப்புகளைத் துச்சமாக எண்ணி, அமைதியாக வெற்றி நினைவுத் தூணைப் பார்வையிட்டு, உறுதிஏற்றுச் சென்று கொண்டிருந்தனர்.

பார்ப்பனக்கும்பலின் கலவரங்களால், 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே புனே நகருக்கு வந்து சேர்ந்தோம்.
நான் மட்டுமல்ல, சுமார் 20 இலட்சம் மக்களும் குழந்தை குட்டிகளோடு, ‘ஜெய்பீம்’ என்று முழங்கிக்கொண்டே நடந்து வந்தனர்.
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, பார்ப்பன அரசுகளுக்கு எதிரான மக்களின் மனநிலையை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிந்தது. வாழ்வில் மறக்க முடியாத நாள் 01.01.2018.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response