தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தொடர்ந்து போராடும் திருப்பூர் எம்.பி – குவியும் பாராட்டுகள்

தமிழ்நாட்டில் எயிம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. அப்போதைய முதலமைச்சர்ஜெயலலிதா, உடனடியாக ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை உட்பட தமிழ்நாட்டில் ஐந்து இடங்களை இதற்காக தெரிவு செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். மத்தியக்குழுவும் இந்த இடங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பார்வையிட்டது. ஆனால் எயிம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை தமிழ்நாட்டில் எங்கு அமைக்கப்படும் என்று மத்திய அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்த விசயத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள். ஆனால் ஜெயலலிதா விருப்பப்படி பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் என்று திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா மட்டும் மறக்காமல் குரல்கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

நேற்று (28.12.17) பாராளுமன்றத்தில், திருப்பூர் எம்.பி சத்தியபாமா மூன்றாவது முறையாக,ஈரோடு_மாவட்டம் – பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்போவதாக அறிவிக்க வேண்டியும், அறிவிப்பதோடு மட்டுமல்ல அதற்கான கட்டுமானப் பணிகளை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எயிம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை அமையுமானால் தமிழ்நாட்டில் மேற்கத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடிப் பேர் பயன்பெறுவார்கள் என்பதோடு கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள். மருத்துவ வசதிக்கான தேவை பெருகி வரும் நிலையில் பெருந்துறையில் எயிம்ஸ் போன்றதொரு உயர் தரத்திலான மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைவது கொங்கு மண்டல மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இருக்கின்ற அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களில் உண்மையிலே நீங்கள் ஒருவர் மட்டும்தான் தமிழ்நாட்டுக்காக ஆணித்தரமாக குரல் கொடுத்து வருகிறீர்கள்.வாழ்த்துகள் ஆயிரம் ப்ரியமான சகோதரி என்று அத்தொகுதி மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்.

Leave a Response