பதட்டத்துடன் வருவோருக்கு சரியான வழிகாட்டல் இல்லை – மருத்துவமனை அவலங்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் விடுக்கும் மனிதநேயமிக்க வேண்டுகோள்…

அரசு நிர்வாகம் இதைக் கவனிக்க வேண்டுகிறோம்.

அன்பார்ந்த முன்களப்பணியாளர்களாகிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சி நண்பர்களுக்கு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமாரின் அன்பான வேண்டுகோள்.
இந்த பதிவு செய்திக்கானது அல்ல..இதனை செய்தியாக வெளியிட வேண்டாம்.

ஒவ்வொரு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் முதலுதவி மற்றும் வழிகாட்டும் மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை..ஒவ்வொரு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அரசு மருத்துவனையாக இருந்தாலும் நோயாளிகளிடம் தற்போது அதிகம் உபயோகிக்கப்படும் வார்த்தை இங்கு பெட் இல்லை வேற பக்கம் பாருங்க என்ற பதில்.

எங்கே போறது?
தெரியாது இங்கே இடமில்லை அவ்வளவுதான்…
இப்படிப்பட்ட பதிலால் நோயாளியின் பாதிப்பு இன்னும் தீவிரமடைகிறது.

ஏதாவது ஒரு மருத்துவமனையிலாவது பதட்டத்தோடு வரும் நோயாளிகளுக்கு ஒரு முதல் உதவி அளித்து நீங்கள் இந்த மருந்தை சாப்பிடலாம், இங்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளலாம், உங்களுக்கு நோய்தாக்கம் குறைவாக தான் உள்ளது அரசு அமைக்கப்பட்ட முகாம்களில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.உங்களது சக மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறித்து கேட்டு அவர்களுக்கு வழிகாட்டலாம்.

இதனை முன்களப்பணியாளர்களாகிய நீங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லுங்கள்.நேற்று நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

பெருந்துறை அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் விவசாயி பாலசுப்பிரமணியம். தனது மகள் நவ மணிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொளத்தூர் பகுதியில் செல்வம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன் இவர்களுக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மூன்று மாத குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உள்ளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை எடுத்துச் சென்று காட்டியபோது குழந்தை பிறந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர் கூறியுள்ளார். அங்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் தொடர் காய்ச்சல் குறையாததால் நேற்று முன்தினம் ஈரோடு மரப்பாலம் அருகே உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.

காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மதியம் 3 மணியளவில் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளது என கூறிய மருத்துவமனை நிர்வாகம் அவர்களை உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியேறும்படி வற்புறுத்தியது.

தனியார் மருத்துவமனை நிர்வாகம் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நீங்கள் செல்லுங்கள் என அனுப்பி விட்டனர்.உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்ற போது இங்கு ஆக்ஸிஜன் படுக்கை வசதி இல்லையென கூறியதோடு காத்திருங்கள் என கூறி விட்டனர். சுமார் மூன்று மணி நேரம் வரை குழந்தையுடன் காத்திருந்த குழந்தையின் தாத்தா பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவனை ஒன்றுக்கு போன் செய்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியுமா என கேட்டுள்ளார்.

நேரில் வரச்சொன்ன தனியார் மருத்துவமனை குழந்தையை பரிசோதித்து விட்டு இங்கு அனுமதிக்க முடியாது ஈரோடு அரசு மருத்துவமனைக்கே கொண்டு செல்லுங்கள் என கூறி விட்டனர்.வேறுவழியில்லாமல் மீன்டும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் நீங்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறிவிட்டனர்.

108 ஆம்புலன்ஸ் மூலம் இரவு 8 மணிக்கு குழந்தையை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து வெளி நோயாளிக்கான அட்டை பதிவு செய்யப்பட்டு அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ஆம்புலன்ஸில் காத்திருந்தனர்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை மையம் இல்லாத நிலையில் தவறான வழிகாட்டுதலின் பேரில் மருத்துவமனையில் சுமார் மூன்றரை மணிநேரம் காத்திருந்தனர். பின்னர் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராகிய என்னை தொடர்பு கொண்டு கூறினார்கள்.

நான் உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டபோது இங்கு குழந்தைகளை பார்க்கும் வசதி இல்லை எனவும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றால் தான் பார்க்க முடியும் எனக் கூறினார்கள்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அதிகாலை 2 மணிக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டது.
அந்த பிஞ்சு குழந்தை தற்போது உயிருக்கு போராடி வருகிறது.

மூன்று மாத குழந்தைக்கு கொரோனா நோய்த்தொற்று என தெரிந்தவுடன் அந்த தனியார் மருத்துவமனை சேலம் அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என முறையான வழிகாட்டுதல் கொடுத்து இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் பத்து மணி நேரம் குழந்தையை தூக்கிக்கொண்டு கடும் மன உளைச்சலை சந்திக்க நேர்ந்திருக்காது.

இந்த மாதிரி கொரோனா பரவல் சூழ்நிலையில் மருத்துவர்களை நான் குற்றம் சாட்ட முன் வரவில்லை.
ஆனால் அவர்களுக்கு ஆறுதலும் சரியான வழிகாட்டும் வழங்கியிருக்கலாம் என்பது தான் என்னுடைய ஆதங்கம்..

அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோய்த்தொற்றால் நிரம்பியுள்ள சூழலில் ஒவ்வொரு மருத்துவமனைகளில் ஆலோசனை வழிகாட்டுதல் மையம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருவத்துவமனைகளிலும் முதலுதவி மையமும் வழிகாட்டு மையமும் அமைத்து பதட்டத்தோடு வரும் நோயாளிக்கு சரியான வழிகாட்டுதலை மேற்கொள்ள இந்த அரசு முன் வரவேண்டும். இந்த நேரத்தில் ஆறுதலும் வழிகாட்டுதலும் தான் நோயாளிகளின் பதட்டத்தை தனித்து நோயை குணமாக்கச்செய்யும்.மேற்சொன்ன சம்பவம் நம் கவனத்திற்கு வந்தவை.ஆனால் கவனத்திற்கு வரமால் சரியான வழிகாட்டுதல் இன்றி ஏராளமான நோயாளிகள் இறந்து வருகின்றனர்.

எனவே ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முதலுதவி மையத்தோடு சரியான வழிகாட்டுதல் குழுவும் அமைத்திடவேண்டும். இதை உங்களோடு பகிர்ந்து கொள்வது மூலம் உங்களால் இந்த கோரிக்கை முன் வைக்கும் போது அதை அரசை சென்றடையும்..

முன் களப்பணியாளராகிய உங்களால் இந்த கோரிக்கை இது சாத்தியமாகும் என நம்புகிறேன்..நன்றி

அன்புடன்..

எஸ்.ஜெயக்குமார்
பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்

Leave a Response