கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது

மத்திய அரசின் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு விருதுகளுடன் முக்கிய விருது குறித்த முடிவையும் இன்று டெல்லியில் கூடிய சாகித்ய அகாடமியின் வாரியக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன.

கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு ஆனநிலையில் ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலுக்காக அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பேராசிரியராகப் பணியாற்றியவர். மேலும் நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். தெளிந்த அரசியல் பார்வையும் அடர்த்திய இலக்கிய ஆளுமையும் இவரது கவிதைகளின் பலம்.

விருதுக்கு தேர்வாகியுள்ள ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலை சென்ற ஆண்டு அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஔவை, மணிமேகலை உள்ளிட்ட 6 நாடகங்களும் எழுதி மேடையேற்றியுள்ளார். அவையும் நூல்களாக வெளிவந்துள்ளன. மேலும் 1 சிறுகதைத் தொகுப்பும் 2 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

யூமா வாசுகி தனது ‘ரத்த உறவு’ நாவல்மூலம் தமிழ் இலக்கியத்தில் நன்கு அறிமுகமானவர். யூமா வாசுகி கவிஞராகவும் அறியப்படுகிறவர். இவர் சிறந்த ஓவியரும்கூட. குதிரைவீரன் பயணம் இவர் நடத்திவரும் இலக்கிய இதழ். யூமா வாசுகி பல ஆண்டுகளாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு பல்வேறு படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ.வி.விஜயன் எழுதிய இந்நூல் யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

Leave a Response