அருவி இயக்குநருக்குக் கிடைத்த அதியுச்ச பாராட்டு

அருவி படத்துக்கும் அதன் இயக்குநருக்கும் நிறைய பாராட்டுகள். அவற்றில் மிகவும் உச்சமான பாராட்டாக பேராசிரியர் ச.ராஜநாயகம் அவர்களின் பாராட்டு அமைந்துள்ளது.

அருவி குறித்து அவர் எழுதியுள்ள பதிவில்……….. மூன்று நிகழ்வுகள். ஒரு கதை.

1.
பதினேழு பதினெட்டு வயது இருக்கும். முதலாண்டு மாணவர். துறையில் அவரது குறும்படம் திரையிடப்பட்டது. சின்னப் படம். பெரிய தாக்கம். கதையின் கனம், நடையின் வளம், பல் இழைகளால் பின்னப்பட்ட காட்சிகளின் வீரியம்…. என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்த மாணவருக்குக் கற்றுத்தர என்னிடம் ஏதுமில்லை என்பதை உணர்ந்த தருணம். அவரிடமிருந்து, அவரோடு சேர்ந்து கற்கத்தொடங்கினேன்… தொடருகிறேன்…

2.
இருபத்து நான்கு இருபத்தைந்து வயது இருக்கும். முன்னாள் மாணவர். அவர் எடுத்து முடித்துக்கொண்டிருக்கும் முதல் படத்தை எனக்கு மடிக்கணினியில் போட்டுக் காட்டினார். துறையில் பொது இடம். பகல் நேரம். படம் முடிந்தது. ஆனால் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை என்னால் மறைக்க முடியவில்லை. மனித நேயமிக்க ஓர் இளம் படைப்பாளியை ஆனந்தக் கண்ணீரோடு துறையில் எதிர்கொண்ட தருணம்.

3.
நேற்று. பரபரப்பான ஒரு புதிய இயக்குநருடைய படத்தைக் காண திரை அரங்கில் நான். அரங்கு நிறைந்திருக்க, அரை இருளின் பாதுகாப்பில், நகையே அழுகை இளிவரல் மருட்கை…. என உணர்ச்சி அருவியில் திளைத்த அனுபவம். ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் அந்தப் படத்தின் மீது பொழிந்த நிஜ அன்பு மழையில்,, படம் குறித்து என்னிடம் தோன்றிய சிறு சிறு நெருடல்கள்கூட வழித்துச் செல்லப்பட்டு விட்ட விச்ராந்தியான அனுபவம். மெய்-திரை அனுபவம்.

சில ஆசிரியர்கள் சில மாணவர்களைக் குறித்து சில சந்தர்ப்பங்களிலாவது, “இவர் படித்த காலத்தில் நான் ஆசிரியராக இருந்தேன்” என்று சொல்லிப் பெருமைப்படுவதுண்டு என்றால்,
அத்தகைய பெருமையில் நான்.

அருண்பிரபு புருஷோத்தமனைக் குறித்து.

அருவி குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

Leave a Response