
படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா இப்போது தோழர் கவுசல்யா. அரசியல் தெளிவு பெற்றுள்ள அவருடைய பதிவு…
தூக்குத் தண்டனை என்ற பெயரில் அரசே கொலை செய்யக் கூடாது எனும் தலைப்பில் என் நேர்காணல் ஜூனியர் விகடனில் வந்துள்ளது. சொன்ன விடைகளில் சில விடுபட்டுள்ளன. விடுபட்டவை நான் புரிந்து ஏற்றுக் கொண்ட கொள்கை, நிலைப்பாடு தொடர்பானது என்பதால்… நான் எப்படி விடைகள் தந்தேனோ அதை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்…
1. தீர்ப்புக்குப் பிறகான உங்களது மனநிலை எப்படி இருக்கிறது ?
தீர்ப்பு வெளியானதும் நான் அதை கொண்டாடிவிடவில்லை. அதேசமயம் என்னுடைய நீண்ட நெடிய போராட்டம் வீண்போகவில்லை என்ற நிம்மதியைப் பெற்றிருக்கிறேன். மரண தண்டனை குறித்த என் கருத்து முற்றிலும் வேறானது. ஆனால் இத்தீர்ப்பு ஜாதி வெறியர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும், ஒரு மனத்தடையை உருவாக்கும் என்ற வகையில் இத்தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இவ்வளவு நாட்களும் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக மிகச் சுதந்திரமாக
பயணித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மூவரின் விடுதலை என் சிறகுகளை முறித்துவிட்டது போன்ற உணர்வை தருகிறது. அந்த உணர்வையும் தூக்கியெறிந்து நான் சிறகடித்துப் பறப்பேனே தவிர, எந்த வகையிலும் முடங்கிவிட மாட்டேன். தொடர்ந்து நீதிக்கான சட்டத்தையும், களப் போராட்டத்தையும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வேன்.
2. சம்பவம் நடைபெற்றது முதல் இப்போதுவரை பலரும் உங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். ஆனால் பிரதான அரசியல் கட்சிகள் உங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா ?
தேர்தல் அரசியல் சாதி வெறிக்கு துணை போகின்றன என்பதை நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். சங்கர் படுகொலை நடைபெற்றபோது முக்கியமான அரசியல் கட்சிகள் கள்ள மௌனம் காத்ததை நான் கவனிக்காமல் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எதிர்மறையான கருத்துகளையும், செயல்களையும் செய்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால் இப்போதுவரை இடதுசாரி இயக்கங்கள், பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக நீதி ஆற்றல்கள் என அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததால், நான் தனித்துவிடப்பட்டதாக கருதவில்லை. அதனால் பிரதான அரசியல் கட்சிகள் ஆதரிக்கவில்லையே என்ற ஏக்கமோ, கவலையோ எனக்கு துளியும் இல்லை. சாதிய கௌரவக் கொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதாகவே நான் உணர்கிறேன். அதை இன்னும் விரிவுபடுத்த தொடர்ந்து உழைப்பேன். சாதிய வன்கொடுமைகள், சாதிய ஆணவக் கொலைகள் போன்றவற்றை காத்திரமாக எதிர்க்காதவர்கள்தான் தேர்தல் அரசியலில் வெற்றிபெறுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பவர்களால் பெரிய அளவில் வெற்றி பெற முடிவதில்லை. எனவே வெகு மக்களின் போராட்டங்கள்தான் அனைத்துக்குமான தீர்வு என முழுமையாக நான் நம்புகிறேன்.
3. இந்த ஒன்றரை ஆண்டில் பல மாற்றங்கள் உங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறதே. அதைப்பற்றி ?
சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ்த் தேசியம் ஆகிய கொள்கைகள் இப்போது என்னில் நிறைந்துள்ளன. அது குறித்த புரிதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. முதலில் ரத்த உறவுகள் மட்டுமே என் ஒரே சொந்தபந்தங்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது கொள்கை வழி உறவுகள் எனக்கு நிறைய கிடைத்திருக்கிறார்கள். ரத்த உறவுகளைத் தாண்டி, இந்த உறவுகள்தான் இறுக்கமாகவும், ஆழமாகவும் தொடர்கிறது. உறுதியான மனிதர்கள் சூழ்ந்த வாழ்வாக என் வாழ்க்கை மாறியிருக்கிறது. அதற்கேற்ற வகையில் உடையிலிருந்து உள்ளம் வரை கம்பீரமானவளாக, நிமிர்ந்து நிற்கும் பெண்ணாக நான் உருமாறியிருக்கிறேன்.
4. பொதுவாக தூக்கு தண்டனை பற்றிய உங்களது எண்ணம் ?
ஒருவரின் உயிரை அவரே எடுத்துக்கொள்வதற்கு உரிமை இல்லாதபோது, அரசு எப்படித் திட்டமிட்டு அடுத்தவர் உயிரை எடுக்க முடியும். தூக்கை எதிர்நோக்கியிருக்கும் நபரின் மனப் போராட்டம் சொற்களால் சித்தரிக்க முடியாத அளவு கொடுமையானது. அந்த வலியை கொடிய எதிரி கூட அனுபவிக்க கூடாது என்றே நான் கருதுகிறேன். உயிரின் மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியும். மரண தண்டனை என்று சொல்வதே தவறு. அதைக் கொலை தண்டனை என்றுதான் அழைக்க வேண்டும். அப்படிப் பார்க்கையில் திட்டமிட்ட கொலையை அரசே செய்யக்கூடாது என்பது என் ஆழமான கருத்து.
5. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம், அவர்கள் மீது வலுவான ஆதாரங்களை காவல்துறை தர தவறிவிட்டார்கள் என நினைக்கிறீர்களா?
இல்லை… இந்த வழக்கில் காவல்துறை ஆரம்பம் முதல் இறுதிவரை மிகச் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். காவல்துறையின் உழைப்பை அருகில் இருந்து பார்த்தவள் என்ற முறையில் அவர்களை எந்தவகையிலும் குறைசொல்ல முடியாது. ஏன் 3 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை தீர்ப்பு ஆவணத்தை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் சொல்ல முடியும்.
6. விடுதலையாகியிருக்கும் உங்களது அம்மாவிடம் என்ன சொல்ல தோன்றுகிறது ? ( நீங்கள் அம்மா என்று அழைக்கமாட்டேன் என்றாலும்)
உங்களுக்குள் இருக்கும் சாதி வெறியால் நீங்கள் இழந்ததே அதிகம் என்பதையும், அதனால் இனி பெறப்போவது ஒன்றுமில்லை என்பதையும் இப்போதாவது உணர்கிறீர்களா ? உங்களது சாதிக் கூட்டத்தில் நீங்கள் கெளரவமாகப் பார்க்கப்படலாம். ஆனால் பொதுச் சமூகத்தில் உங்களை வெறும் கொலையாளிகளாகப் பார்க்கப்படுவதை இப்போதாவது புரிந்துகொள்கிறீர்களா ?
இனியாவது சாதியைத் தூக்கியெறிந்து மனிதர்களாக மறுபிறவி எடுப்பீர்கள் என நம்புகிறேன்.
7. கெளசல்யாவின் அன்றாட நடவடிக்கைகள் இப்போது என்னவாக இருக்கிறது ?
பறை இசைப் பயிற்சி மற்றும் கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். தினமும் அம்பேத்கர், பெரியாரின் நூல்களை படிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். சங்கர் தனிப் பயிற்சி மையம் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவதுடன், பறை, சிலம்பம் உள்ளிட்ட தமிழ் கலைகளையும் கற்றுத் தருகிறோம். இப்போது தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் காதலர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை துவங்கும் வேலைகளில் இருக்கிறேன்.
8. சங்கர் இல்லாத வீட்டில் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது ?
சிறையில் உள்ள கைதி பகல் நேரத்தில் விளையாடலாம். அதில் வெற்றி பெறுவதற்காக முயற்சித்து வெற்றியும் பெறலாம். ஆனால் மாலைக்குப் பிறகு தனிக் கொட்டடிக்குள் அடைபட்ட பிறகு அவருடைய உலகத்தில் தனிமையும், ஆற்றாமையும்தான் அதிகமாக இருக்கும். அதேபோல நான் எவ்வளவு கூட்டத்துக்கு நடுவில் இருந்தாலும், என்னுடைய ஆழ்மனம் என்றுமே தனிமை உணர்வோடு
தான் இருக்கிறது. இப்போது அது எனக்குப் பழகியும்விட்டது. சங்கர் அவ்வளவு உயர்வானவன்.
9. இந்த ஒன்றரை வருடங்களில் பொதுவாக தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகள், வேதனைகளைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டது என்ன ?
கீழ் வெண்மணி, முருகேசன் – கண்ணகி, கல்பனா, மேலவளவு முருகேசன் போன்றவர்களின் படுகொலைகளைப் பற்றி முன்பு தெரியாது. அதுபோன்ற சாதியப் படுகொலைகளைப் பற்றி இப்போது நன்றாக அறிந்தும், உணர்ந்தும் இருக்கிறேன். சமீபத்தில்கூட நந்தினி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் என்னை உலுக்கிப்போட்டது. அனிதாவின் கொலை சாதியத்தின் பார்ப்பனியத்தின் கோர முகத்தையே எனக்கு காட்டியது. இன்றைக்கும் ஊரும், சேரியும் வேறாகவே இருக்கின்றன. இரட்டை டம்ளர் போன்ற வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தக் கொடுமைகளைப் பற்றி கற்று உணர்ந்துதான் சாதியை எதிர்த்துப் போராடி வருகிறேன்.
10. இனி பொதுப் பிரச்னைகளில், மக்கள் போராட்டங்களில் கெளசல்யாவை எதிர்பார்க்கலாமா ?
முன்பின் தெரியாத பலரும் என் சங்கரின் நீதிக்காக கடுமையாக உழைத்தார்கள். அதேபோல நானும், முன்பின் அறியாத எந்தவித உறவுமில்லாத மனிதர்கள்மீது நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக உழைக்க விரும்புகிறேன். எங்களின் நீதிக்காக உழைத்தவர்களுக்கு நான் இப்படித்தான் கைமாறு செய்ய முடியும். இது என் வாழ்நாள் கடமை. நான் ஒரு போராளியாக, ” தோழர் கெளசல்யாவாக”, வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான போராட்டக் களத்தில் முன் நிற்பேன்.
11. எதிர்காலத்தில் காதல் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்களிடம் கெளசல்யா பகிர்ந்துகொள்ள நினைப்பது என்ன ?
உங்களது காதலில் அசைக்க முடியாத உறுதியோடு இருங்கள். யாருக்காகவும், எதற்காகவும் காதலை விட்டுக் கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெற்றோரின் சம்மதம் பெற போராடுங்கள். போராடிப் பயனில்லை என்று வரும்போது, துணிவுடன் முடிவெடுங்கள். உங்களின் காதலில் சாதி ஒழிப்பு நோக்கம் இருந்தால் இன்னும் நல்லது. திருமணத்துக்குப் பிறகு சாதியற்றவர்களாகவே வாழுங்கள். உங்களின் பிள்ளைகளையும் சாதியற்றவர்களாய் வளருங்கள்.


