அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணம் இந்தப்படங்கள்தானா?

நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நவம்பர் 21,2017 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில்,நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். என் குடும்பத்தினரை தூக்கி விடுவதாக மிரட்டினார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி கடந்த ஏழு ஆண்டுகளாக அன்புவிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருப்பது தெரியவருகிறது. இந்த ஏழாண்டுகளில் சசிகுமார் தயாரித்த படங்கள் எவை? அவை வெற்றியா? தோல்வியா? என்று பார்ப்போம்.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சசிகுமார் தயாரித்து இயக்கிய ஈசன் படம் வெளியானது.சுப்பிரமணியபுரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சசிகுமார் இயக்கிய படமென்பதால் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான அந்தப்படம் தோல்வியைச் சந்தித்தது.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த போராளி படம் வெளியானது. அதுவும் தோல்வி.

2012 செப்டம்பர் 14 ஆம் தேதி எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் வெளியானது. இது வெற்றிப்படமாக அமைந்தது.

2013 டிசம்பர் 20 ஆம் தேதி பாலுமகேந்திரா இயக்கி நடித்த தலைமுறைகள் படம் வெளியானது. அப்படம் பெரிய பொருட்செலவு இல்லையென்றாலும் அதிலும் அவர்களுக்கு நட்டமே.

2016 ஜனவரி 14 ஆம் தேதி பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரைதப்பட்டை வெளியானது. இதில் பாலாவோடு சசிகுமாரும் தயாரிப்பில் இணைந்திருந்தார். இதிலும் அவருக்கு நட்டம்.

2016 செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியான பிரசாத்முருகேசன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த கிடாரி படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் குறைவு என்கிறார்கள்.

2016 டிசம்பர் 23 இல் சோலைபிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த பலேவெள்ளையத்தேவா படமும் தோல்வியைச் சந்திக்கிறது.

அதன்பின் இப்போது தயாராகியிருக்கும் கொடிவீரன் படம் நவம்பர் 30 இல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏழாண்டுகளில் தயாரித்த எட்டுப்படங்களில் ஒரு படம் மட்டுமே வெற்றி என்பதும் மற்ற படங்கள் தோல்வி. எனவேதான் கடன் சுமை ஏறியிருக்கிறது. அதன்விளைவு இப்படி அநியாயமாக ஒரு உயிர் போயிருக்கிறது.

Leave a Response