திருப்பூர் மண்ணை மலடாக்கும் சாயப்பட்டறைகளுக்கு எதிராகக் கடும் போராட்டம் – ஏர்முனை எச்சரிக்கை

விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஏர்முனை இளைஞர் அணியின் செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி,சாயப்பட்டறை கழிவுநீரால் சீரழியும் திருப்பூர் மாவட்ட கிராமங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு….

திருப்பூர், இலட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருக்கிறது,பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணியை நாட்டுக்கு ஈட்டிக் கொடுக்கிறது, சில நூறு பேரை கோடிஸ்வரர் ஆக்கியிருக்கிறது, சில ஆயிரம் பேரை இலட்சாதிபதி ஆக்கியிருக்கிறது.

ஆனால் தமக்கு இவ்வளவு வளமும் வாழ்க்கையும் தந்த மண்ணுக்கு கைம்மாறாக சிலர் செய்து கொண்டிருக்கும் படுபாதகச் செயல்,தங்களது தொழிற்சாலைக் கழிவுநீரை சுத்திகரிக்கும் செலவை மிச்சபடுத்த கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளை புதிதாக புதிதாக உருவாக்கி அந்தக் கழிவு நீரை நேரடியாக அதனுள் விட்டு பூமித் தாயை பாழாக்கி மண்ணை மலடாக்குவது.

கொங்கு மண்டலத்தின் முக்கிய நதியான நொய்யலாறு இவர்களது சாயபட்டறைக் கழிவுநீர் கலப்பால் சாகடிக்கப்பட்டுவிட்டது என்ற வருத்தமான உண்மை யாரும் அறியாதது அல்ல. நொய்யல் நதி செல்லும் வழியெங்கும் உள்ள கிராமங்கள் எல்லாமே கடந்த பல வருடங்களாக விவசாயம் செய்ய வழியில்லாமல் சாயபட்டறை நீர் உட்புகுந்து குடிப்பதற்குக் கூட நீரின்றி, மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிப்போய் தலைநிமிர்ந்து வாழ்ந்த விவசாய பெருங்குடிமக்கள் எல்லாம் இன்று தலைகுனிந்து கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருப்பது அனைவரும் அறிந்த நிதர்சனமான உண்மை.

சாயபட்டறை முதலாளிகளின் இலாபப் பசிக்கு இப்போது புதிய புதிய இடங்களில் நல்ல நீர்வளமுள்ள இடங்கள் தேவைப்படுகிறது. திருப்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர்த்தேவை, பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கான பாசனநீர்த் தேவை, சுற்றுச்சூழல் சீர்கேடு இவற்றையெல்லாம் சிறிதளவு கூட எண்ணாமல் சில டையிங் முதலாளிகள் தங்களது பணலாபத்துக்காக வாழ்வுதரும் மண்ணை மலடாக்கும் படுபாதகச் செயலை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தற்போது பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணபதிபாளையம், கரைபுதூர்,அருள்புரம்,மங்களம் பகுதி வேட்டுவபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அங்கேரிபாளையம், வெங்கமேடு, ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அவர்களது இரக்கமற்ற செயலின் விளைவாக அக்கிராமங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மாசுபட்டுப் போய் பல நிறங்களில் துர்நாற்றத்தோடு நீர் வருகிறது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை அரசிடமும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்த போதும் கண்துடைப்பு நடவடிக்கையாக சிலமுறை பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்களே தவிர இதுவரை எந்த நடவடிக்கையும் தவறு செய்யும் சாயபட்டறைகள் மேல் எடுக்கப்படவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக சமூக அக்கறையுள்ள பல அமைப்புகள் சாயக்கழிவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியும், நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்தும்,அபராதம் விதித்தும் தொடர்ந்து இந்த படுபாதகச் செயலை செய்பவர்கள் சாமனியர்கள் அல்லர். இலட்சங்களிலும் கோடிகளிலும் சம்பாதிப்பவர்கள். தாம் சம்பாதித்ததில் எத்தனை இலட்சங்களையும், கோடிகளையும் கொட்டிக் கொடுத்தாலும் தன்னால் தன்னுடைய மண் இழந்த தாய்மையை மீட்டுத் தந்துவிட முடியாது என்பதை உணராதவர்கள்.

சமூக நலனுக்காகக் கூட வேண்டாம் தமது குடும்பமும் சந்ததியும் இதனால் பாதிக்கப்படும் என உணர்ந்தாவது தமது லாபத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து சாயக்கழிவை சுத்திகரிப்பு செய்யலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்வதற்கு பதிலாக இந்தத் தவறுகளைக் கண்டித்துத் திருத்த வேண்டிய அதிகாரிகளைச் சரிக்கட்ட இலஞ்சமாக அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இது தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்தையும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் கேட்டுக் கொள்கிறோம்.முறையான தீர்வு கிடைக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response