துப்பாக்கி தூக்கினால்தான் மதிப்பீர்களா? – சிங்கள அமைச்சரை நோக்கிச் சீறும் கவிஞர்

ஹர்த்தாலினால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் போராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் எவரையும் விடுவிக்கமாட்டோம் என்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜயவர்த்தன கூறுகிறார்.

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாரிய குற்றவாளிகளா? விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்றும் விடுதலைப் புலிகளுக்கு பாதை காட்டினார்கள் என்றும் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்திலும் இருபத்தைந்து ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட அப்பாவிகள் அவர்கள்.

இவர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா? கருணா அம்மான் குற்றவாளி இல்லை. கே.பி குற்றவாளி இல்லை. எமது மண்ணில் இனப்படுகொலை செய்த ராஜபக்சக்களை பாதுகாத்துக் கொண்டு, இந்த அப்பாவிகள்தான் பாரிய குற்றச்சாட்டை புரிந்த பயங்கரவாதிகளா?

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மக்கள் ஒவ்வொரு செயலையும் ஜனநாயக ரீதியான போராட்டமாகவே முன்னெடுக்கின்றனர். அப்படியான நடவடிக்கைகளில் ஒன்றாகவே 2015 ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி நீங்கள் ஆட்சி அமைக்க ஈழத் தமிழ் மக்கள் உதவினார்கள். அதனால்தான் நீங்கள் இப்போது அமைச்சர்.

வடக்கு மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்திய கதவடைப்பு போராட்டத்தினால் எதையும் சாதிக்க முடியாது என்றால் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டங்களை மதிக்க மாட்டீர்கள் என்றால் மீண்டும் தமிழ் மக்களை ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் என்று நிர்பந்திக்கிறீர்களா?

-தீபச்செல்வன்

Leave a Response