எக்ஸ் வீடியோஸ் படத்துக்கும் ஜீவாவின் கீ படத்துக்கும் என்ன தொடர்பு?

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள திரைப்படம் எக்ஸ் வீடியோஸ்.

ஆபாசப்படங்களின் பெயரைப் படத்துக்கு வைத்திருப்பது எதனால்? என்று இயக்குநர் சஜோசுந்தர் கூறுகிறார்,,,,

நான் இந்தப்படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்பதைச் சொல்ல ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன்.

ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது . என் நண்பர் ஒருவர் எனக்கு, தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ.

அது என்னை அதிர வைத்தது மட்டுமல்ல அது பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவும் வைத்தது. அப்படிப்பட்டவை பற்றிய விவரம் சேகரிக்க இறங்கிய போது பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் தெரிய வந்தன. இப்படிச் சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிற வீடியோக்கள் உலகம் முழுக்கச் செல்கின்றன. அது தொடர்பாகப் பல கோடி வியாபாரம் நடக்கிறது. அதன் பின்னணியில் பெரிய மாபியா கும்பலே இயங்கி வருகிறது.

இவை எனக்குப் புரிந்ததும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம். இது பற்றிய விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது என் கடமையாகத் தோன்றியது.

இந்தப் படக் கதை பற்றிப் பலரும் பயந்தார்கள்.எல்லாரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.முதலில் என் மனைவியைச் சமாதானப்படுத்திப் புரியவைக்கப் படாத பாடுபட்டேன். இப்படியே நடிகர்கள்,தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.மற்றவர்கள் போல நீங்களும் வியாபார சினிமா எடுத்து விட்டுப் போகலாமே என்று இப்போதும் எல்லாரும் கேட்கிறார்கள்.

இப்போது நான் சொல்கிறேன்.இது ஆபாசமான படமல்ல.ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம். இன்று வரும் எத்தனையோ படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை. ஏதாவது கூச்சப்படுகிற மாதிரி சங்கோஜப்படுகிற மாதிரி காட்சிகள் இருக்கும். இதைத் தமிழிலும் இந்தியிலும் எடுத்திருக்கிறோம். சென்சாரில் ரிவைசிங் கமிட்டி போனபோது கமிட்டியில் இருந்த பிரபல இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி படம் பார்த்து விட்டு துணிச்சலான முயற்சி, சமுதாயத்துக்குத் தேவையான படம் என்று பாராட்டினார்.

எல்லாரும் சொல்கிறார்கள் வணிகப் படம் எடுத்து ஏன் சம்பாதிக்கக் கூடாது என்று. இன்று எத்தனை பேர் படமெடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்? நான் சமீபத்தில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். அரசுப் பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாமல் பெண் பிள்ளைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கிக் கொண்டு விடுகிறார்கள் என்று. இது எவ்வளவு பெரிய கொடுமை . நான் இப்போது மனப்பூர்வமாகச் சொல்கிறேன், இந்தப் படத்தில் எனக்கு இலாபம் வந்தால் அதில் பெரும் பகுதியை அரசுப் பள்ளிகளுக்குக் கழிப்பறை கட்டப் பயன்படுத்துவேன் இவ்வாறு இயக்குநர் கூறுகிறார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பு வடிவமைப்பாளர் அக்ஷயா பேசும் போது,

இப்படத்தில், அபிநவ்,நிஜய்,ஷான் ஆகியோர் நாயகர்களாகவும்,அஜய்ராஜ் ஒரு முக்கியவேடத்திலும்,
நாயகியாக ஆஹிருதி சிங்கும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையும் ஜீவா நாயகனாக நடிக்கும் கீ படத்தின் கதையும் ஒரே மாதிரி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response