பட்டாசு வெடிப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? – அதிர்ச்சித் தகவல்கள்


நாளுக்கு நாள் பெருகிவரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பட்டாசுகள் வெடிக்கும் பழக்கமும் பெருகிக்கொண்டே வருகிறது. அரசியல், சினிமா கொண்டாட்டங்கள், தலைவர்களின் பிறந்தநாள், அரசியல், சங்க கூட்டங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என பட்டாசு வெடிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.

அடுத்த வாரம் இந்நேரம் நம் சுற்றுச்சூழல் மாசடையத் தொடங்கியிருக்கும். பறவைகள் எல்லாம் தனது வாழிடங்களை விட்டு மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடிக் கொண்டிருக்கும். பட்டாசால் பாதிக்கப்பட்டவர்களை வரவேற்க மருத்துவமனைகள் தயாரகிக்கொண்டிருக்கும். இந்த சூழலை நம்மால் மாற்ற முடியாதா? முடியும் என்ற நம்பிக்கையோடு ”ஈரோடு வாசல்” நட்புகள் கலந்துரையாடிய கருத்துக்கள் இவை :

பட்டாசு மருந்தைச் சுற்றி எவ்வளவு சுற்றுக்கள் காகிதம் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வீரியம் இருக்கும். பட்டாசு எப்படி நம் நாட்டில் அறிமுகமாகி இருக்கும்?
பண்டைய காலத்தில் விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கலாம்.

கோவில்களில் பூஜை நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் வாணம்(பட்டாசு) விடுவார்கள். இது ஊர் மக்களுக்கு பூஜை நடைபெறுவதை தெரிவிப்பதற்கான சமிக்ஞை. இந்த சமிக்ஞை பின்னாளில் விரிவடைந்து திருவிழாக்களில் அதிகமாகி, பண்டிகை வடிவில் ஆடம்பர கொண்டாட்டமாக அறிமுகமாகி இருக்கலாம்.

எதற்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கின்றோம்? இந்த கேள்விக்கு பதில் வேண்டுமென்றால் ஏன் தீபாவளி கொண்டாடுகிறோம் என்ற கேள்விக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். தீபாவளி எப்படி வந்தது என்று தேடினால் முடியை பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு வெவ்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகின்றன..

தீபம் – விளக்கு ; ஆவளி – வரிசை. தீபம்+ஆவளி = தீபாவளி. தீய எண்ணங்களாக மனதில் இருக்கும் இருளை போக்க விளக்குகளை வரிசையாக ஏற்றி கொண்டாடுவது தான் தீபாவளி. காலப்போக்கில் தீபங்கள் பட்டாசுகளாய் உருமாறி விட்டன. இப்பொழுது தீபாவளி மட்டுமின்றி அனைத்து கொண்டாட்டங்களிலும் பட்டாசு இடம் பிடித்து விட்டது. இதில் வணிக நோக்கமும் முக்கிய காரணமாக உள்ளது.

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்காவே வாங்கப்படுகின்றன. பட்டாசை தவிர்க்க நினைத்தாலும், ஊரில் உள்ள குழந்தைகள் பட்டாசு வெடிப்பதை பார்க்கும் போது தம் குழந்தைகள் ஏக்கப்படும் என்று கருதி வாங்கி கொடுத்து விடுகிறார்கள். பட்டாசு வெடிப்பதனால் தம் பிள்ளைகளுக்கு உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிந்தும், ஒருநாள் தானே என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். சில வீடுகளில் உறவினர்கள் எப்படியும் வாங்கி கொடுத்து விடுகிறார்கள். உறவினர்களை எதிர்த்து பேச முடியாத தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில வீடுகளில் பட்டாசு வெடிப்பது தங்கள் செல்வ செழிப்பை அறிவிப்பதாகவே பார்க்கப் படுகிறது.

இன்னும் சிலர் பட்டாசே வேண்டாம் என்றாலும் ‘நீ ஒருவன் மாறுவதால் உலகம் மாறிவிடுகிறதா’ என்று வேறு சீண்டுகிறார்கள். குழந்தைகள் வளர்ந்து பட்டாசுகளின் விளைவை உணரும் போது அடுத்த தலைமுறை அவர்களுக்கு பின்னால் அணுகுண்டுடன் வந்து நிற்கின்றது.

சரி பட்டாசு வெடிப்பதனால் என்னென் பாதிப்புகள் ஏற்படுகின்றன?
* பட்டாசுக் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதால் நிலத்தில் வாழும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன.

* நீர் நிலைகளில் கலக்கும் கழிவுகளால் நீர் மாசுபடுவதோடு நீர் வாழ் உயிரினங்களும் அழிகின்றன.

* பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் வெப்பம் புவி வெப்பமயமாதலை ஏற்படுத்துகிறது.

* பட்டாசு புகை காற்றில் கலந்து மனிதர்களுக்கு ஆஸ்துமா, இருமல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல், புற்றுநோய் மற்றும் இன்னும் பல நோய்கள் ஏற்படுகின்றன.

* ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கும் ஓசோனுக்கு பட்டாசுகளும் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன.

இப்படி ஐம்பூதங்களை பாதிப்பதோடு ஐந்தறிவு உயிர்களின் வாழ்க்கை சூழலையும், ஆறறிவு மனிதர்களின் உடல் நிலையையும் மாற்றுகின்றது பட்டாசு. பலரின் பார்வை திறனை பறிக்கும் பட்டாசு வெடிக்கும்போது வரும் அதிக அளவிலான டெசிபல், மனிதர்களின் செவித்திறனை பாதிப்பதோடு கேட்கும் திறனையும் குறைத்து விடுகின்றன. பறவைகள் மற்றும் விலங்குகள், அவற்றின் கேட்கும் திறன் மூலம் தான் பெரும்பலான சமிக்ஞைகளை உணர்கின்றன.

குழந்தைகள்தான் அதிகம் பட்டாசை விரும்புகின்றனர். அதே குழந்தைகளைத்தான் பட்டாசும் அதிகம் பாதிக்கினறது. காய்ச்சல், வாந்தி, தூக்கமின்மை, தோல் ஒவ்வாமை போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு, வெடிப்பவர்களை மட்டும் பாதிப்பதோடு இல்லாமல் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் தலையிலும் கை வைக்கின்றது. சிவகாசியில் பல உயிர்களை காவு வாங்கிக்கொண்டு வரும் கரிப்பொருளைத்தான் நாம் காசு கொடுத்து வாங்கிறோம். வெறும் கைகளால் மருந்துகளை கையாலும் போது பலவித தோல்நோய்கள் ஏற்படுகின்றன. சில தனிமங்கள் உடலைவிட்டு போகவே பல நாட்கள் ஆகும்.

பட்டாசினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு என்னதான் தீர்வு?

பண்டிகையை கொண்டாடுவது நமது உரிமை. ஆனால் சுற்றுச்சூழலையும் நம் சந்ததியினரையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. எப்படியெல்லாம் பட்டாசு வெடிக்கலாம் என குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் நாம் தான் பட்டாசு வெடித்தால் என்ன நடக்கும் என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* நட்பு, உறவு வட்டங்களில் உள்ள குழந்தைகளில் பட்டாசே வெடிக்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு ஏதேனும் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

அவர்கள் பட்டாசு வெடிக்காமல் இருப்பதற்கான காரணத்தை வீடியோகவா பதிவு செய்து மற்றவர்களுக்கு பகிரலாம். இது மற்ற குழந்தைகளிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக அமையும்.

தீபாவளி அன்று குழந்தைகளை சூழலியல் சுற்றுலா அழைத்துச் செல்லலாம்.

பட்டாசிற்காக செலவிடும் பணத்தை வேறு நல்ல வழியில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக…

*புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

*பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் வைத்து பரிசளிக்கலாம். சுற்றுப்புறங்களை தூய்மை படுத்த வைக்கலாம்.

*விழிப்புணர்வு தெரு நாடகங்களை நடத்தலாம்.

*சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அடங்கிய உடைகளை கடை தெருவில் சுற்றித்திரியும் மனநிலை பாதிக்கப்பட்டோர், குடும்பத்தால் கை விடப்பட்டோர் போன்றவர்களுக்கு வழங்கலாம்.

*துணிப் பைகளை கடை வீதிகளில் விநியோகம் செய்யலாம்.

*விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிடலாம்

*நடிகர்கள், தங்களது ரசிகர்களை பட்டாசுகளை தவிர்க்குமாறு வலியுறுத்தலாம்.

*ஆடம்பரத்தை விரும்புவர்கள் லேசர் ஒளிக் காட்சி நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

சில வருடங்களுக்கு முன் புதிய தலைமுறை வார இதழ், சிவகாசியில் மிகப்பெரும் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ‘பட்டாசு விளம்பரங்களை தங்களது இதழில் வெளியிட மாட்டோம்’ என அறிவித்தது. இது போன்ற முடிவுகளை மற்ற நிறுவனங்களும் முன்னெடுக்கலாம்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் பட்டாசுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தலாம்.

பட்டாசுகள் குறித்து எதிர் பிரச்சாரத்தை நடிகர், நடிகைகள, கிரிக்கெட் வீரர்கள் மூலம் தொடங்கி, ஐந்தே ஆண்டுகளில் குழந்தைகளே இதை வேண்டாம் என்று சொல்ல வைத்துவிடலாம். ஆனால் பட்டாசுகளை விட பல மடங்கு சூழல் மாசுகளை அனுமதிக்கும் அல்லது முன்னின்று நடத்தும் அரசாங்கத்திடம் அதையெல்லாம் எதிர் பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்.

மாற்றங்களை நம்மில் இருந்து தொடங்குவோம். மாசில்லா பண்டிகைகளை நம்மை பின் தொடரும் தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்.

Leave a Response