
தமிழக அரசின் நிலைமையே கேள்விக்குறியாகிருக்கும் நிலையில், நீட் விவகாரத்தில் சொதப்பிய நிலையில், இதுவரை உருப்படியாக செயல்பட்ட கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. கடந்த சில வாரங்களாக சமூகத்தில் எழுந்த எதிர்ப்புகளை மீறி இந்த உத்தரவை போட்டிருக்கிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு, பாடத்திட்டம் முழுமையாக மாற்றப்படும் வரை நிபுணர் குழுவில் உள்ள கல்வி செயலர் உட்பட யாரையும் மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுற்றிவளைத்து உதயச்சந்திரன் அவர்களை பாடத்திட்டம் மறுசீரமைப்பு குழுவின் செயலராக (புதிய செயலர் பதவி) அறிவித்து இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இன்றைய தேவை பாடத்திட்டம் மாற்றம் மட்டுமல்ல, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, நேர்மையான நிர்வாகம், பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுத்தல், தேர்வுகள் நடத்தப்படும் விதம், ஆசிரியர்களின் நேர்மையான நியமனம், பாட நூல் கழகத்தின் பதிப்புகள், நூலகங்களை மேம்படுத்துதல் என்று அடுத்த 5 வருடங்களுக்காவது திறம்பட செயல்பட வேண்டிய தேவையுள்ளது. மேற்சொன்ன அத்தனை விசயங்களிலும் திரு.உதயச்சந்திரன் தன்னுடைய கவனத்தை செலுத்த ஆரம்பித்திருந்தார். ஆனால் வழக்கம் போல் சும்மா பெயருக்கு ஒரு செயலர் பதவி உருவாக்கப்பட்டு இன்று ஒட்டு மொத்த தமிழக கல்வித்துறையின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.


