
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி வி.சத்தியபாமா, மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெய்ட்லியை 19.07.2017 அன்று சந்தித்து உடுத்தக்கூடிய ஆயத்த ஆடைகள் மற்றும் செயற்கை நூலிழை (MMF) ஆகியவை தொடர்பான பணிகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைமை தொடங்கிய பிறகு குறிப்பாக திருப்பூர் போன்ற ஜவுளித்துறை தொழில் மையங்களைப் பெரிதும் பாதிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டியது மிக அவசியம். ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி உண்மையில் 18 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 11.06.2017 அன்று ஜி எஸ் டி சபைக்கூட்டம் நடந்த பிறகு இந்த வரிவிகிதம் ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டது. எனினும் இந்த திருத்தப்பட்ட வரி விகிதம் பருத்தி நூல் மற்றும் ஜவுளி ஆடைகளுக்கு மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் உடுத்தக்கூடிய ஆயத்த ஆடைகள் தொடர்பான வேலைகள் இந்த வரி விகிதக் குறைப்பில் இடம்பெறவில்லை. குறு வர்த்தக தொழில் துறை மூலமாக ஆயத்த ஆடை நிலையில் பெரும்பான்மையான வேலைகள் நடைபெறும் திருப்பூர் போன்ற ஜவுளித்துறை மையங்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே பல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் சந்தித்துவரும் சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் ஜவுளித்துறையின் துணித்தயாரிப்பு தொடர் கட்டமைப்பில் உள்ள அனைத்து பணிகளுக்கும் சரிசமமாக ஒரே வரிவிகிதமாக 5 சதவிகித ஜி.எஸ்.டியை விதிக்கவேண்டும் என்று
சத்தியபாமா கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜூலை 19 இல் இல் அவர் அருண்ஜெட்லியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அதன்பின் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 20-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
அக்கூட்டத்துக்குப் பின்னர் அருண்ஜெட்லி கூறுகையில், 19 சேவைகளின் வரி விகிதம் திருத்தியமைக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜவுளி சார்ந்த எம்பிராய்டரி, தரைவிரிப்பு , நெசவு, குளிருக்குப் பயன்படும் ஷால்களை பின்னுதல் போன்ற உப தொழில்கள் மீதான வரிவிதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் டிராக்டர் உதிரி பாகங்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
71 லட்சம் நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்கு மாறியுள்ளதாகவும்15. 67 லட்சம் நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்திருப்பதாகவும் அருண்ஜெட்லி குறிப்பிட்டார்.
சத்தியபாமா விடுத்த கோரிக்கையின் படி ஜவுளி மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வறிவிப்புக்காக அருண்ஜெட்லிக்கு நன்றி தெரிவித்துள்ளார் சத்தியபாமா.


