மூன்றாண்டுகளில் அமித்ஷாவின் சொத்துமதிப்பு 300 மடங்கு உயர்வு – வேட்புமனுவால் தெரிந்தது

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 மடங்கு உயர்ந்திருக்கிறது என்ற செய்தியை 30.7.2017 அன்று ஊடகங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில் அனைத்து செய்திகளும் அழிக்கப்பட்டுவிட்டன.

அமித்ஷாவின் அரசியல் வாழ்க்கை 1998-ஆம் ஆண்டு ஆரம்பிக்கிறது, அமித்ஷாவின் பரம்பரையினரும் பெரும் செல்வந்தர்கள் கிடையாது, அமித்ஷாவின் பெற்றோர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள். மற்றபடி அவர்களின் பரம்பரையினர் விட்டுச் சென்ற சொத்துக்கள் என எதுவும் கிடையாது.

அமித்ஷா தனது பள்ளிப்பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஈடுபாடு கொண்டு அதன் தீவிர உறுப்பினராக இருந்துவந்தார். இந்த காலகட்டத்தில்தான் நரேந்திரமோடியுடன் நட்பு கிடைத்து இருவரும் தீவிர ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களாக மாறினர். குஜராத்தைச் சேர்ந்த ‘பாம்பே சமாச்சார்’ என்ற பத்திரிகை 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அமித்ஷா குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது.

அதில் தனது மாணவப் பருவத்தில் ஒரு நாளைக்கு 12 இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்க்க வேண்டும் என்ற குறிக் கோளுடன் தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர வேண்டும் என்று கூறி கையோடு வைத்திருக்கும் இவர்களைச்சார்ந்த அமைப்பின் பெயரில் இருக்கும் சீட்டில் கையொப்பமும் வாங்கி விடுவாராம். (ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேரடியாக எந்த ஒருஉறுப்பினர் படிவமும் தருவதில்லை) இவர் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஏபிவிபி குஜராத் மண்டலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அப்போதைய காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அணியான ஏபிவிபி., தமது அமைப்பைச் சேர்ந்தவர்களை அவர்கள் படிக்கும் கல்வி நிர்வாகம் ஒத்துழைப்போடு முடிந்தவரை அவர்களை தேர்ச்சி பெற வைத்து வெளியே அனுப்பும் வேலையைச் செய்துவந்தது. இதனால் அமித்ஷா வகையறாக்களுக்கும் சிரமப்பட்டு படிக்கும் அவசியமும் இல்லை.

இளங்கலைப் பட்டம் பெற்ற உடன் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கினார். இவர் அரசியலில் இறங்கிய உடனேயே இவருக்கும், நரேந்திரமோடிக்கும் உடனடியாக தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்து குஜராத் சட்டமன்றத்திற்கு அனுப்பியது ஆர்.எஸ்.எஸ். தலைமை.

1997-ஆம் ஆண்டு சர்காஜ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற அமித்ஷா தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2002-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் குஜராத்தில் ஆட்சி அமைந்த போது குஜராத் உள்துறை அமைச் சராகப் பதவி வகித்து வந்தார்.

தன்னுடைய பதவிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்திவந்தார். முக்கியமாக இர்ஷத் ஜகான் போலி என்கவுண்டர், சொராப்புத்தீன் போலி என்கவுண்டர் என பல கொலைகளை இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது நடத்திக்காட்டியுள்ளார். இவை அனைத்தும் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைக் கொலை செய்யவந்தார்கள் என்ற பெயரில் நடந்தேறின.

ஆனால் இக்கொலைகள் அனைத்தும் போலியானவை என்றும், தன் மேல் உள்ள குற்றங்களை மறைக்க இந்த தொடர் போலி என்கவுண்டர்களைச் செய்தார் என்றும் சிபிஅய் விசாரணையில் தெரியவந்துள்ளது, இந்த வழக்குகள் இன்றளவும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

சொராப்புத்தீன் கொலைவழக்கில் அமித்ஷா பணத்திற்காக கொலைசெய்யும் ஒரு கைதேர்ந்த குற்றவாளியைப் போல் செயல்பட்டுள்ளார் என்று சிபிஅய் தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

சொராப்புத்தீன் ராஜஸ்தானைச்சேர்ந்த இரண்டு கிரானைட் தொழிலதிபர்களை மிரட்டி பணம் கேட்டதாகவும், அவர்கள் இதை அமித்ஷாவிடம் தெரிவிக்க அந்த தொழிலதிபர்களிடம் பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு சொராப்புத்தீனையும், அவரது மனைவியையும் ஆந்திரா சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் இருந்து கைது செய்து, குஜராத் காவல்துறைக்கு சொந்தமான ஒரு வனப்பகுதியில் சொகுசு பங்களாவில் சொராப்புத்தீன் மற்றும் அவரது மனைவியைக் கொலைசெய்து எரித்துச் சாம்பலாக்கி அந்த சாம்பலை அங்கு நடப்பட்டிருந்த சப்போட்டா மரக் கன்றுகளுக்கு உரமாகப் போட்டனர். இதையும் சிபிஅய் தன்னுடைய குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடிக்காக கருநாடகாவைச்சேர்ந்த ஒரு இளம் பெண் அதிகாரியை உளவு பார்த்ததும் இதேஅமித்ஷாதான்.

இந்த அமிஷா சொத்து மதிப்பு இவர் போட்டியிட்ட முதல் தேர்தலில் வெறும் 13 லட்சங்களாக காண்பிக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் இவரது சொத்துமதிப்பு 8.4 கோடி தான். ஆனால் தற்போது குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட இவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் இவரது சொத்துமதிப்பு 300 மடங்கு அதிகரித்துள்ளது.

இவரது தந்தை பங்குச்சந்தை வணிகமும், தண்ணீர்க்குழாய் பைப்பு(பிபிசி) மொத்த விற்பனை கடையும் நடந்திவந்த போது 2 கோடி கூட இவரது தந்தையின் சொத்துமதிப்பு உயரவில்லை. ஆனால் அய்ந்து ஆண்டுகளில் 13 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அமித்ஷா குஜராத் கூட்டுறவு வங்கித்தலைவராக இருந்த போது பல கோடிகள் கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, 2016-ஆம் ஆண்டு மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை யின் போது கூட்டுறவு வங்கியில் பணம் அதிக அளவு மாற்றப்பட்டது. இது தொடர்பாக அகமதாபாத் நகர காவல்நிலையத்தில் சமூக ஆர்வலர் நரேஷ் ஜெயின் என்பவர் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

அமித்ஷா பற்றிய இந்தச் செய்திகள் அனைத்தும் ஏதோ ஒரு சாதாரண செய்திகளைப் போல் இந்திய ஊடகங்களில் கடந்து சென்று விட்டன.

இந்த நிலையில் பாஜக ஆட்சியில் அமித்ஷாவின் சொத்துமதிப்பு 300 மடங்கு அதிகரிப்பு என்ற செய்தி, அனைத்து முன்னணி செய்தி ஊடகங்களின் இணைய பதிப்பிலும் தலைப்புச் செய்தியாக மாறியது. ஆனால் இந்தச் செய்திகள் வெளியிட்ட சில நிமிடங்களில் அமித்ஷா குறித்த அத்தனை செய்திகளும் காணாமல் போயின.

“டைம்ஸ் ஆப் இந்தியா”, “எகனாமிக்ஸ் டைம்ஸ்”, “பிஸ்னஸ் லைன்”, “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” அதே போல் இந்தி ஊடகங்களான ஜாகரன், பாஸ்கர், நவ்பாரத் டைம்ஸ், மகா நகர் உள்ளிட்ட அனைத்து பிரபல ஊடகங்களும் உடனடியாகச் செய்தியை நீக்கியுள்ளன.

அதே போல் எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடியாக விவாதம் நடத்தும் இந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மோடியின் மன் கி பாத் குறித்தும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரிப் பதவி விலகல் குறித்தும் விவாதம் நடத்திக்கொண்டிருந்தன.

பிரபல எழுத்தாளர் மறைந்த குஷ்வந்த் சிங் “பத்திரிகைகள் அரசியல் வாதிகளின் ஊழல்களை மறைக்கும் போது அந்த நாடு அபாயத்தின் பிடியில் சிக்கிவிடும்” என்றார். இன்று இந்தியா அபாயத்தின் பிடியில் சிக்கியுள்ளது, அனைவரின் கண்களுக்கும் புலப்படுகிறது.

Leave a Response