சீமான் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் அமைக்கத் திட்டமிட்டது இதை வைத்துத்தான்

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிமீழத்தைக் கட்டியெழுப்பத் தமிழர்கள் – தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதே தமிழீழ அரசின் நோக்காக இருந்தது. நெடுந்தீவு கடல்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான ஆராய்ச்சி மையமாக இருந்தது.

நாட்டின் நிருவாகத்தை பொதுநலன் கொண்டு நிருவகிக்கக் கூடிய சிற்பிகள் செஞ்சோலையில் வளர்ந்து வந்தனர்.
வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது மாங்குளம் தமிழர்களின் பாதுகாப்பு மையமாக விளங்கியது. மாங்குளத்தின் நில அமைப்பும் பரந்துவிரிந்த காட்டுப் பிரதேசமும் குறைவான மக்கள் குடியிருப்பும் ஒரு தொழில் துறை நகரை கட்டியெழுப்ப வாய்ப்பாக இருந்தது. மாங்குளத்தை பெருநகராகக் கட்டியெழுப்ப விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
கிளிநொச்சிப் பெருநகருக்கும் தொழிற்றுறை நகராக வளர்ந்து வரும் மாங்குளத்துக்குமிடையில் எ-9 வீதியின் மேற்குப் பகுதியில் உள்ள பெருவெளியில் – காட்டுப் பகுதியில் அறிவியல் நகரைக் கட்டியெழுப்ப விடுதலைப்புலிகள் விரும்பினர். இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைக்கும் அளவுக்கு யுத்தப் பேரழிவையும் தாங்கியாவாறு அறிவியல் நகர் விளங்குகிறது.

கிளிநொச்சி மற்றும் மாங்குளம் ஆகிய பெருநகர்களுக்கிடையில் ஒரு அறிவியல் நகரை உருவாக்கும் செயற்திட்டம் தமிழீழத் தனியரசு நிறுவிய விடுதலைப் புலிகள் அமைப்பின் திட்டமிடல் ஆலோசகர்களால் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் முன்வைக்கப்பட்டது. தாயகத்தில் இருந்த புலமையாளர்களுடன் தமிழக மற்றும் புலம்பெயர் அறிஞர்களும் இத்திட்டத்தைத் தயாரிப்பதில் பங்குகொண்டனர். அறிவியல் நகரானது ஏறத்தாழ 5000 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட இருந்தது. இதற்காக எ-9 வீதிக்கு சமாந்தரமாக வீதி ஒன்றும் அமைக்கப்பட்டது.

அறிவியல் நகர் 1 இல் ஊடகவியற் கல்லுாரி (ஐயன் குளம் ஊடகவியில் கல்லுாரி)‚ மாவீரர் குடியிருப்பு‚ எழுத்தாளர் குடியிருப்பு‚ மருத்துவப் பயிற்சி நிலையம்‚ விண்வெளி ஆய்வு மையம்‚ நவம் அறிவுக்கூடம்‚ அன்பு இல்லம்‚ அன்பு மூதாளர் பேணகம்‚ செஞ்சோலை‚ காந்தரூபன் அறிவுச்சோலை முதலானவை அமைந்திருந்தன.

அறிவியல் நகர் 2 இல் விளையாட்டுத் துறைக்கான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு ஆரம்பநிலையில் இருந்தது. இங்கிலாந்து கிறிக்கற் அணியின் முன்னாள் தலைவர் இயன்பொத்தம் இந்நகரைப் பார்வையிட வருகை தந்திருந்தார்.

அறிவியல் நகர் 3 இல் தமிழ்மொழி ஆய்வுப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. தமிழ் மொழியியற் பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பில் தமிழ்மொழி‚ கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையினர் பன்னாட்டு தமிழ்ப் பேரறிஞர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர். இம் மொழியியற் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி‚ தமிழர் நாகரிகம், சிந்துவெளியில் தமிழ் ஆய்வுகள், தமிழின் தொன்மை‚ தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான தொடர்பு‚ தமிழர் கலைகள்‚ பண்பாடு‚ கலாசாரம் முதலான தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் எந்த ஒரு மொழியியலாளரும்‚ ஆய்வாளரும் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புடன் கூடிய உயர் தரத்திலான வளாகச் சூழல் ஏற்படுத்தப்பட இருந்தது.

இயற்கையுடன் – வனத்தின் வனப்புடன் இணைந்த கட்டுமானமாக ஆய்வுப் பல்கலைக் கழகம் அமைக்கப்படவிருந்தது. எந்தவித குளிரூட்டி வசதிகளும் இல்லாமலே குளிர்ச்சியான காற்று உள்வரத்தக்க முறையில் இந்நகரின் ஆரம்பக் கட்டுமானத்தினை விடுதலைப் புலிகள் செய்திருந்தனர். இவ்வாரம்பக் கட்டுமானத்திற்காக பெருமரங்கள் தறிக்கப்படவில்லை.

நாமக்கல்லைச் சேர்ந்த தமிழபிமானியும் தமிழறிஞருமாகிய இராமசாமி என்பவர் தனது வாழ்நாள் சேமிப்புக்களை இந்த மொழியியற் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இவர் வழங்கிய நூல்களில் ஒரு தொகுதி மொழியியற் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தது. மீதி நூல்கள் தற்போதும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

இவ்வாறே அறிவியல் நகர் 3‚ 4‚ 5 ஆகியவற்றில் விஞ்ஞான தொழிநுட்ப ஆய்வுகளுக்கான வளாகங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

Leave a Response