காலை முதலே முள்ளிவாய்க்காலில் திரண்ட தமிழினம், நெஞ்சைப் பிசையும் அழுகுரல்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்றுடன் 8 வருடங்கள் ஆகின்றன. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த எமது தமிழ் உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகள் உணர்வுப் பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது தமிழ் மக்கள் துடிதுடித்து மடிந்த இடத்தில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் வருகை தருவதை காணக்கூடியதாக உள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில், எதிர்க்கட்சிச் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மும்மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பொதுச்சுடரை முதலமைச்சர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது,

உறவுகளை இழந்த மக்கள் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“என்ர பிள்ளை, என் கடைக்குட்டி பிள்ளை, எங்கே சென்றாயடா??…. அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டிய என் தங்கமே, எங்கே சென்றாய்?

நான் வளர்த்தவனே, என்ர ஐயா… நான் பெற்றவனே.. நான் வளர்த்தவனே… நீ எங்கேயடா???

ஒன்றா இரண்டா, ஒன்பது பேரைக் கொடுத்து விட்டேனே….

இவ்வாறு பிள்ளைகளை இழந்த தாய்மார், கணவரை இழந்த மனைவிமார், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என அனைவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கண்ணீர்விட்டழும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.

உலகின் செவிகளுக்கு இக்குரல்கள் எட்டுமா?

Leave a Response