
அமரன் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,இப்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.இந்தமுறை புதுமையான திரைக்கதையுடன்,இரசிகர்களைக் கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல்முறையாக இணைகிறார்கள்.
இது தனுஷ் நடிக்கும் 55 ஆவது திரைப்படம்.இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா ஜூன் 18 அன்று நடைபெற்றது.இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு இளம் தலைமுறையின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.முதல்கட்டப் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில்,படத்தின் அடுத்தகட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படம் வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர் டேக் ஸ்டுடியோஸ் (R Take Studios) மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar Films) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா,படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது….
இந்த திரைப்படம் ‘ஓம்’ என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளது.தலைப்பு தேர்விலிருந்து நடிகர்,நடிகைகள் தேர்வுவரை,தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.இந்தப்படத்தைச் சுற்றி நடந்த ஒவ்வொரு விசயத்தையும்,இதில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது,இது அனைவருக்கும் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான பயணமாக அமையும் என்ற முழுநம்பிக்கை எனக்கு உள்ளது.இந்தப்படத்தில் இணைந்துள்ள அனைவரும் அதே உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். தனுஷ் சார் முதல்,ஷ்ரேயாஸ் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் இந்தப்படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கி வருகின்றனர்.குறிப்பாக,மம்முட்டி சார்,சாய் பல்லவி,ஸ்ரீலீலா,இந்திரன் சார் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.அனைவரின் பங்களிப்பாலும் படம் மிகவும் சிறப்பாக உருவாகிவருகிறது.
இந்தப்படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக்குழு பணியாற்றி வருகிறது.ஒளிப்பதிவாளர்,கேமரா குழு,தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.ஒளிப்பதிவாளர் எழிலரசு மிகச்சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.படத்தொகுப்பாளராக ‘அமரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கலை பணியாற்றி வருகிறார்.இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோவையும் அவர்தான் தொகுத்துள்ளார்.
இந்த வீடியோவை வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவாக மட்டும் பார்க்கக்கூடாது.ஒரு போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, தனுஷ் சார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை உருவாக்கியுள்ளோம். படத்தின் டீசர்,ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அறிமுகடீசர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சிலவாரங்களிலும்,வரும் மாதங்களிலும் வெளியாகும்.
அக்டோபர் 16 இந்தப்படத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும்.அந்த நாளில்தான் படம் வெளியாக உள்ளது.மேலும்,படத்திற்கு ‘ஓம்: சேப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளோம்.இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல;மிகவும் சிறப்பான,பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும்.இந்த தலைப்பிற்குள் பல சுவாரசியமான அம்சங்களும்,பல்வேறு அடுக்குகளும் உள்ளன.அவை படிப்படியாக இரசிகர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.


