மருத்துவப்படிப்புக்கு பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்ததற்கு மாறாக நீட் எனும் புதிய தேர்வு முறையை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது.
அதனால் பல குழப்பங்கள். தமிழகத்தில் அத்தேர்வு முறை காரணமாக இதுவரை பதினைந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை ‘நீட்’ எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற (செப்டம்பர் 12,2021) ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி – ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் கனிமொழி (17). பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி, நீட் தேர்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) எழுதியுள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகள் கனிமொழியை தந்தை தேற்றியுள்ளார். எனினும், மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு (செப்டம்பர் 13) தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்றிருந்த கருணாநிதி மற்றும் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கனிமொழி தூக்கில் சடலமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி வழக்கறிஞராக உள்ளார். கனிமொழிக்கு உடன்பிறந்த சகோதரி கயல்விழி (19), பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2 ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
அந்த மாணவியின் தந்தை பெயர் கருணாநிதி என்பதால் “கருணாநிதி மகள் கனிமொழி தற்கொலை என்று சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்குகிறார்கள்.
ஒரு சின்னத்தளிர் மறைந்திருக்கிறது. இதிலுமா இப்படி ஒரு குறுக்குப்புத்தி.