
அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிகப் போர்நிறுத்தத்தை அமல் செய்தன.ஆனால் தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் இருதரப்பும் அவ்வப்போது தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.பாகிஸ்தான்,
கத்தார் உள்ளிட்ட நாடுகள் இருதரப்புக்குமிடையே சமரசமுயற்சிகளில் ஈடுபட்டன.இதன்காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 19 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று
அறிவிக்கப்பட்டது.இந்தச் சூழலில் ஒருநாள் முன்னதாகவே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள வெர்சாய் அரண்மனையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நேற்று விருந்து அளிக்கப்பட்டது.அப்போது அவர் மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.இதேபோல ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்தபடி அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் அமைதி
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்….
வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன்.உலக அமைதி,பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதில் ஈரான் உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சமரச தூதர் என்ற வகையில் அமெரிக்கா,ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் மின்னணு முறையில் கையெழுத்திட்டார்.அவர் சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது….
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்,சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்,ஜெராட் குஷ்னர்,ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி,ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்,வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி,உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி ஆகியோருக்கு நன்றி.
சமரச முயற்சிகளில் ஈடுபட்ட கத்தார்,சவுதி அரேபியா,துருக்கி,எகிப்து நாடுகளின் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் இராணுவ தளபதி அசிம் முனீருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளிடையே நடந்த போரால் 111 நாட்கள் நீடித்த பதற்றம் தற்போது முழுமையாகத் தணிந்திருக்கிறது.
குறிப்பாக சவுதி அரேபியா,ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.போர் காரணமாக இதுவரை ரூ.122 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்,எரிவாயு,உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பல்வேறு
நாடுகளின் பொருளாதாரம் முழுமையாகச் சீர்குலைந்திருக்கிறது.பங்குச்சந்தைகள் கடும்வீழ்ச்சி அடைந்துள்ளன. உரத்தட்டுப்பாட்டால் பல்வேறு நாடுகளில் உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயமும் எழுந்திருக்கிறது.அமைதி ஒப்பந்தம் காரணமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமுகத்தீர்வு காணப்பட்டுள்ளது என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


