
ஏப்ரல் 9 ஆம் தேதி கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது.அங்கு 140 தொகுதிகள் உள்ளன.இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும்(எல்டிஎஃப்),காங்கிரசு
தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) கடும்போட்டி இருந்தது.
மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில்,ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரசு 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது.இதரதொகுதிகள்
கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல்,இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிட்டது. இதரதொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிட்டது.இதரதொகுதிகள் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரசுக் கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதில், காங்கிரசு 63, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22, கேஇசி 7, ஆர்எஸ்பி 3, ஆர்ஜேடி 1, கேஇசி(ஜே) 1 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் எனும்
நிலையில்,காங்கிரசு தலைமையிலான கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் மீண்டும் ஆட்சியைக்
கைப்பற்ற இருக்கிறது.
கடைசியாக காங்கிரசு தலைமையிலான காங்கிரசுக் கூட்டணி ஆட்சி 2011 முதல் 2016 வரை ஆட்சியில் இருந்தது. அப்போது உம்மன்சாண்டி முதல்மைச்சராக இருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் ஆட்சியில் அமரவுள்ளது.
கேரள காங்கிரசுக் கட்சியின் மூத்ததலைவரான ரமேஷ் சென்னிதலா ஹரிபாட் தொகுதியில் போட்டியிட்டார்.அவர் இம்முறை 68,184 வாக்குகள் பெற்று மீண்டும் அதேதொகுதியில் வெற்றி பெற்றார்.கட்சியின் மற்றொரு
மூத்ததலைவரும்,எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன் இம்முறை பரவூர் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில்,அவர் மொத்தம் 78,658 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 35 இடங்களைக் கைப்பற்றி 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 85,614
வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களையும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது.திருவனந்தபுரத்தில் உள்ள நெமோன்,கழக்கூட்டம்,
சத்தன்னூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.நெமோன் தொகுதியில்,பாஜகவின்
மூத்ததலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் வெற்றி பெற்றார்.இவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும் அமைச்சருமான வி.சிவன்குட்டியை 3,590 வாக்குகள்
வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


