
2026 தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான நேற்று சென்னை, நந்தனம் மைதானத்தில் நடந்த தவெக பரப்புரை நிகழ்வில் நடிகர் விஜய் பேசியதாவது….
நமது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. அதில் என்றுமே நாம் மாறவில்லை. கொண்ட கொள்கையில் தவெக உறுதியாக இருக்கிறது.
எம்மதமும் நம்மதம்.அந்த உண்மையான முகம்தான் விஜய்யின் முகம்.விஜய் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவ மக்களின் நண்பனாக இருப்பான்.சிறுபான்மை மக்களுக்கு என்றும் ஆதரவான நபராக விஜய் இருப்பான்.
மதச்சார்பற்ற சமூகநீதிதான் நமது கொள்கை.இதில் 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம்.விஜய் ஒன்று சொன்னால் அதிலிருந்து மாறமாட்டான்.
திமுகவுக்கும் பாஜகவுக்கு இடையே மறைமுக டீலிங் இருக்கிறது என முன்பே சொன்னேன்.இந்தத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்திப்பது நிச்சயம்.திமுக ஆட்சி கதம், கதம்.
திமுக 300, 200 சீட்டுகள் வெற்றி பெறும் என்று கடுப்பில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.கட்சியைக் காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும்.பாஜகவின் முதல் அடிமை யார் என போட்டி நடக்கிறது.திமுகவும் மற்றும் பலரும் தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி.
பாஜக அமைச்சர் ஒருவர் என்னை நடிகர் நடிகர் என்று சொல்கிறார்.ஆமாம் நான் நடிகன்தான்.நான் அரசியலுக்கு வந்து நடிக்கவில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்குக் கடன்வாங்கி கடன்சுமையை உயர்த்தியது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்விக்கடனையாவது இரத்து செய்திருக்கலாம்.
மக்களைக் கண்டுகொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப் போகும் தேர்தலில் கடைசி பிரச்சாரம்.
மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம்.திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது.வீட்டுவரி உயர்ந்துள்ளது,குப்பைக்குக் கூட வரி விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது.
ஏதாவது ஒரு பிரச்சினையென்றால் விஜய் வெளியே வரமாட்டார் என 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார்.உங்களால் சேலத்தைத் தாண்டி வேறு இடத்தில் போட்டியிட முடியுமா? தோற்று விடுவோம் என்று பயந்துகொண்டு, சொந்தத் தொகுதியிலேயே நம்முடைய தவெக சின்னத்தைத் திருடியவர்.அதனால்தான், நமது மன்றத்தில் பல வருடமாகப் பயணித்த சுயச்சை வேட்பாளரின் சின்னத்தை நம்முடையதாக ஆதரித்து சுயேச்சை வேட்பாளருக்கு தொலைக்காட்சி சின்னத்தில் வாக்களிப்பது விசில் சின்னத்திற்கு வாக்களிப்பது போன்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் சாரிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றி ஆக வேண்டும். கரூரில் என்ன நடந்தது என கரூர் மக்களே புட்டுப்புட்டு வைப்பார்கள். நான் ஸ்டாலினுக்கு என்ன கெடுதல் செய்தேன்?. அவர் சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணைப் போட்டேனா?
ஸ்டாலின் சார்… கரூர் விசயத்தில் நான் லேட்டாக வந்துட்டதாகப் பழியைத் தூக்கி என் மேல் போட்டார். நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில இருக்கின்ற மக்களை அப்படியே விட்டுட்டு வரச் சொல்றீங்களா?
நான் எப்படி வந்தேன் என அனைவரும் லைவில் பார்த்தனர்.ஆனால், வாய்கூசாமல் என் மேல் பழி போடுகிறீர்கள். கரூரில் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் உங்கள் அடிமையை ஏன் கரூரில் இருந்து கோவைக்கு அனுப்பினீர்கள்?
சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரண்டு பேருமே வேண்டாம். இது ஒரு மாற்றத்துக்கான தேர்தல். ஸ்டாலின் சார் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, ஏண்டா விஜய்யைத் தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்துவீர்கள்.
தமிழ்நாட்டில் இரண்டுமுனைப் போட்டிதான். ஒன்று தீய சக்தி திமுக; மற்றொன்று தவெக. நீங்கள்தான் எனக்கு தேர்தலில் நீதி வழங்க வேண்டும்
இவ்வாறு விஜய் பேசினார்.


