திருமாவளவன் போட்டியிலிருந்து விலகியது ஏன்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்றான காட்டுமான்னார்கோவில் தொகுதியில் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று,நான் போட்டியிடவில்லை என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.அவருக்குப் பதிலாக காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது….

சட்டப்பேரவைக்குப் செல்லவேண்டும் என்று விரும்பினேன்.ஏற்கெனவே திமுக கூட்டணியில் மங்களூரு தொகுதியில் வென்றவன் நான்.பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை.

2006 முதல் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னபோது மறுத்தேன். வென்றாலும் தோற்றாலும் தனிச்சினத்தில்தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தேன். 2021 தேர்தலிலேயே எம்.பி. பதவியைத் துறந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்தது.

இப்போது நடைபெறப்போவது வழக்கமான தேர்தல் அல்ல. வலதுசாரிகள் திட்டமிட்டு பல்வேறு சதிகளைச் செய்தார்கள்.எந்த ஆசைவார்த்தைக்கும் எந்த தூண்டுதலுக்கும் ஆளாகாமல் திமுக கூட்டணியை வலுவாக்கினேன். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை 1999 ஆம் ஆண்டே முழங்கியவன்நான். இந்தமுறை கூட்டணி ஆட்சி பற்றிப் பேசமாட்டோம் என திட்டவட்டமாகக் கூறினோம்.

திமுகவுக்கு ஆதரவாக என் நிலைப்பாட்டைத்தான் சட்டப்பேரவையில் விசிக உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
நான் பேசாத எதையும் சட்டப்பேரவையில் விசிக உறுப்பினர்கள் முன்வைக்கவில்லை. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் போட்டியிட 150 பேர் விருப்பம் தெரிவித்தனர். புதியவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதற்காகவே ஏற்கெனவே இருந்தவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை.ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் 9 பேர் எதிரியாகிறார்கள்.

ஆளூர் ஷா நவாஸ் பிரச்சாரத்துக்கு செல்ல முன்வந்தார்.விசிக நலனுக்காக என்றென்றும் இருப்பேன் என்று ஆளூர் ஷா நவாஸ் கூறினார். உள்நோக்கத்தோடு சட்டப்பேரவைக்குள் செல்ல திருமா நினைக்கிறார் என கட்டுக்கதையைப் பரப்பினார்கள்.எனக்கு யாரும் அழுத்தம் தரமுடியாது. என்னைக் கட்டாயப்படுத்தி ஒரு வேலையை யாராலும் செய்யவைக்க முடியாது.

திமுக கூட்டணியின் நலனைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு கருத்து பரப்பப்படுகிறது.முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று நான் இருக்கமாட்டேன்.பின்வாங்குவதும் ராஜதந்திரம்தான்.யுக்தியை மட்டுமே மாற்றியுள்ளேன்.பதவி ஆசை இருந்திருந்தால் 2006 இல் சட்டமன்றத் தேர்தலில் நின்றிருப்பேன்.பதவிக்காக நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவன் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.அவருடைய பதவிக்காலம் 2029 வரை இருக்கிறது.அவர் சட்டமன்றத் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியாக வேண்டும்.அது தெரிந்தேதான் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அதனால்,தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர் கூட்டணி மாறப்போகிறார் என்கிற கருத்து வலுப்பெற்றதும் அது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் வகையில் அமைந்திருந்ததுமே அவர் போட்டியிலிருந்து விலகக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response