
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமைச்சர்கள் காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி ஆகிய மூவருக்கும் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.இவர்களில், காந்தியின் மகன் வினோத் காந்தி இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
தனக்குக் கொடுக்காமல் தன் மகனுக்கு வாய்ப்பு கொடுத்ததால்,அமைச்சர் காந்தி அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, தனது தந்தைக்காக வினோத் காந்தி இராணிப்பேட்டையில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில்…
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால்,என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தைக் கருத்தில் கொண்டு,இந்தவாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து,நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்டவாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன்,சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில்,அமைச்சர் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
ஆனால், இதுகுறித்து திமுக தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறும் நாளில்தான் இராணிப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் யார்? என்பது தெரியவரும் என்கிற சூழல் எழுந்துள்ளது.
