2026 -27 ஒன்றிய நிதிநிலை அறிக்கை – இராகுல்காந்தி கருத்து

2026 -27 ஆம் ஆண்டுக்கான இந்திய ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி,சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது….

வேலையில்லாத இளைஞர்கள், சரிந்து வரும் உற்பத்தி, முதலீட்டைத் திரும்பப் பெறும் முதலீட்டாளர்கள், அதலபாதாளத்தில் விழும் குடும்ப சேமிப்புகள், துயரத்தில் உள்ள விவசாயிகள், வரவிருக்கும் உலகளாவிய அதிர்ச்சிகள் ஆகிய அனைத்தும் இந்த நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் குறித்து பார்வையற்ற, திருத்தங்களைச் செய்ய மறுக்கும் ஒரு நிதிநிலை அறிக்கை இது என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடினமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்கான தொலைநோக்குப் பார்வை இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில்,

மோடி அரசாங்கத்திடம் யோசனைகள் தீர்ந்துவிட்டது. நமது விவசாயிகள் நலத்திட்டங்களுக்காக காத்திருக்கிறார்கள்.பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் காணப்பட்டதை விட ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிட்டது.ஆனால் பட்ஜெட் அதைப் பற்றிக் குறிப்பிடக்கூட இல்லை. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த ஆதரவும் வழங்கப்படவில்லை.

நாட்டின் உற்பத்தியில் மறுமலர்ச்சி இல்லை.நமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கான தீவிர திட்டம் இல்லை. ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது. சரிந்து வரும் ரூபாய் மதிப்பை சரிசெய்ய எந்தத் திட்டமும் இல்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கான பணவீக்கத்துக்கு நிவாரணம் இல்லை. நாட்டின் சேமிப்பு வீழ்ந்து, கடன் உயர்ந்துள்ளது குறித்து எந்தத் திட்டமும் இல்லை.

உள்கட்டமைப்பு வாக்குறுதிகள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. நமக்கு எப்போது “ஸ்மார்ட் சிட்டிகள்” அல்லது வாழக்கூடிய நகரங்கள் கிடைக்கும். சமூகப் பாதுகாப்பு குறித்து ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பு கூட இல்லை.இந்த நிதிநிலை அறிக்கை இதற்கு எந்தத் தீர்வுகளையும் வழங்கவில்லை

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

Leave a Response