கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின்
கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தவெக தலைவரான விஜய்யை கடுமையாக விமர்சித்தும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க்
தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா
உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி,
என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தவெக தரப்பில் மூத்த
வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், சி.ஆர்யமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தொடர்பில்லாத விஜய் சம்பவ இடத்தில் இருந்து பொறுப்பற்ற முறையில் ஓடிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக தரப்பில் வாதங்களை முன்வைக்க வாய்ப்பும் அளிக்கவில்லை. சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறையினர் தான் அந்த இடத்தை விட்டுச் செல்லும்படி விஜய்க்கு உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவு தவெக-வின் அரசியல் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதே
காரணத்துக்காக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்து தனியாக சிறப்பு
புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டு இருப்பது தவறான நடைமுறை. எனவே உச்ச நீதிமன்றமே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு வாதிட்டனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிட்டனர்.
உயிரிழப்பு சம்பவத்தில் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. முதலமைச்சர் உடனடியாக கரூருக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், காயமடைந்தவர்களுக்கு உடனடி
சிகிச்சைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கெனவே சிபிஐ-யில் பணியாற்றிய
நேர்மையான அதிகாரியான வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கூட்டங்களை முறைப்படுத்தக்கோரி வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
விசாரிக்கவில்லை. விஜய் 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு வந்ததால்தான் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு விஜய் மட்டுமே தார்மீகரீதியாக பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து காவல்துறையினர் மீது குற்றம்சாட்டி அரசியல் சாயம் பூசக்கூடாது.
இவ்வாறு வாதத்தில் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரு
நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்போது, சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் தனி நீதிபதி விசாரித்தது ஏன் எனவும், இந்த இரு உத்தரவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன என்றும், ஒரேநாளில் வெவ்வேறு உத்தரவுகள்
பிறப்பித்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘கரூர் சம்பவத்துக்கு காவல்துறையினரின் அஜாக்கிரதையே காரணம். இரவோடு இரவாக 41 உடல்களுக்கும் பிரேத பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது. ஒருபுறம் தனி நபர் ஆணையம், மறுபுறம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை என தெளிவற்ற நிலையில் விசாரணை செல்கிறது. செயற்கை மின்தடை, சமூக விரோதிகளின் குழப்பம் காரணமாக பலர் இறந்துள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவேதான் சிபிஐ விசாரணை கோருகிறோம் என்றனர்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்