அதிமுக ஒருங்கிணைப்பில் முன்னேற்றம் – வெளிப்படுத்திய சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது இதனை 4 அடுக்கிலிருந்து 2அடுக்குகளாக அதாவது 5% மற்றும் 18% என திருத்தம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களின் மீதுள்ள சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் சமையலறைப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், மருந்துகள், விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் வரை பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, நெய், பனீர், வெண்ணெய், பிரெட் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையும், டிவி, ஏசி, வாஷிங் மெஷின்கள் போன்ற பல வீட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று தினசரி பயன்பாட்டுப் பொருட்களான ஹேர் ஆயில், டாய்லெட் சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்றவற்றின் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துவிட்டன.

ஒன்றிய அரசு செய்துள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் விவசாயத்திற்குத் தேவையான உரப் பொருட்களுக்கு 5% அளவுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உரப்பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முற்றிலுமாக வரிவிலக்கு செய்யவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை பொதுமக்கள் முழுமையாக அடையும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப விற்பனையாளர்கள் விற்பனை விலையில் மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணித்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த பேச்சு வார்த்தைகள் திவிரமாக நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சசிகலா. ஒருங்கிணைப்பு முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response